கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (செப்டம்பர் 5) நான்காவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இ மெயில் மூலம் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுமுறை நாளாக இருந்ததால் இன்று குறைந்த ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அலுவலக இ-மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் அலுவலக வளாகத்தில் முழுமையாக சோதனை செய்தனர். நுழைவாயில்கள், வாகன நிறுத்துமிடம், புதிய கட்டிடம், பழைய கட்டிடம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் சோதிக்கப்பட்டன. நீண்ட நேர சோதனையின் பின், இது வழக்கம் போல் வெறும் புரளி மிரட்டல் என்பது தெரியவந்தது.
கடந்த பத்து நாட்களில் மட்டும் நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
வெளிநாட்டில் இருந்து மர்ம நபர் இ-மெயில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு தொடரந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் குற்றவாளிகளை கண்டறிய இயலாமல் காவல் துறையினர் திண்டாடி வருகின்றனர்.