சென்னையில் முதல்வர் வீடு, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 3) சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, பாஜக தலைமை அலுவலகம், அமெரிக்க துாதரகம், நடிகை திரிஷா வீடு மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் வீடு ஆகிய இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பகுதிகளுக்கு போலீசார் விரைந்தனர்.மோப்ப நாய் உதவியுடன் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட முகவரியை பயன்படுத்தியது யார் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக வரும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய இயலாமல் போலீசார் திணறி வருகின்றனர்.