கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து, பாஜகவினர் இன்று (மார்ச் 26) மாலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஒரு பாஜக தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை அறிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் கோவை வடக்கு தொகுதி மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாஜக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்தராஜன் கிணத்துக்கடவு தொகுதியில் ஏராளமான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கிணத்துக்கடவு தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தெற்கு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியினர் இன்று மாலை கூடி ஆலோசனை நடத்தினர். ஆவேசமடைந்த தொண்டர்கள் திடீரென பொள்ளாச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் திடீரென தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி தங்களுக்கு வேண்டும் என பாஜக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இந்நிலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை அக்கட்சியின் நிர்வாகிகள் சமரசப்படுத்தி மீண்டும் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்தராஜன், “கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒதுக்கப்படாததால் தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்களை சமரசப்படுத்தியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற்று கட்சியினருக்கு வாய்ப்புகளைப் பெறுவோம் என்று சொல்லி சமரசப்படுத்தியுள்ளோம்” என்றார்.
