உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை பாஜக தலைவர் பாராட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது நேற்று முன்தினம் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீச முயன்றார். அப்போது ‘சனாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’ என்றும் கூச்சலிட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வைலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அசம்பாவித சம்பவத்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய பார் கவுன்சில் ராகேஷ் கிஷோரை இடை நீக்கம் செய்துள்ளது.
இதற்கிடையில் கர்நாடக மாநில பாஜக தலைவரும், பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ், “சட்டப்படி முற்றிலும் தவறு என்றாலும், இந்த வயதிலும் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அதன்படி வாழ்ந்த உங்கள் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்,” என்று காலணி வீசிய வழக்கறிஞரை பாராட்டி பதிவிட்டிருந்தார்.
அது ராகேஷ் கிஷோரின் போலி கணக்கு என தெரியாமல் ரிப்ளை செய்துவிட்டு, கடும் கண்டனம் எழுந்தநிலையில் பதிவை நீக்கி விட்டார்.
பாஸ்கர் ராவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகா காங்கிரஸ் தலைவர் மன்சூர் கான், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரை புகழ்வது வெட்கக் கேடானது என கடுமையாக சாடி உள்ளார்.
முன்னதாக செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “காலணியை வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சரியானதைச் செய்துள்ளேன். இதனால் சிறைக்குச் செல்வேன், அங்கு துன்பப்படுவேன் என அனைத்து விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான் இதைச் செய்தேன். இதையெல்லாம் செய்வதற்கு கடவுள்தான் என்னை தூண்டினார்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.