பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
எச்.ராஜாவின் சமூக வலைதளப் பக்கத்தில் அவரது குடும்பத்தின் பெயரால் வெளியிடப்பட்டுள்ள பதிவு: H.ராஜா, 30.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற NDTV விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அந்த அரங்கிலே இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் வழங்கி இரத்த சர்க்கரை அளவு குறைந்திருக்குமோ என்றெண்ணி சர்க்கரை அளித்துள்ளனர். அத்தொலைக்காட்சியின் அடுத்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விவாத அரங்கில் இருந்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமா தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர் என்பதால் சூழ்நிலையின் தீவிரத்தையும் H.ராஜாவுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பின் அறிகுறியையும் உணர்ந்து விரைந்து செயல்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகிலுள்ள பாலாஜி மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடுகளை செய்துள்ளார். அந்த தருணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ANS.பிரசாத், ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் B.S.பெருமாள், H.ராஜா தனிச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் பாலாஜி மருத்துவமனைக்கு H.ராஜாவை அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சையின் போது உடனிருந்துள்ளனர். மருத்துவர் பாலசுப்ரமணியன், உடனடி மருத்துவ சிகிச்சை அளித்து CT ஸ்கேன் எடுத்து உயர் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்து பாலாஜி மருத்துவமனை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனை செல்ல உதவி புரிந்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் H ராஜா அனுமதிக்கப்பட்ட தருணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம்
உடனிருந்து தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் சீனிவாச பரமசிவம், மருத்துவர் செங்கோட்டுவேல் ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்துள்ளனர். தகவலறிந்து பாஜக தேசிய செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் ஆகியோர் மருத்துவ சிகிச்சை தொடங்கி H.ராஜா அபாயகட்டத்தை கடந்துவிட்டார்; அவருக்கு சிகிச்சை பலனிக்கத் தொடங்கிவிட்டது; அவர் நிச்சயம் குணமாகி விடுவார் என்கிற செய்தியை மருத்துவர்கள் அளிக்கும் வரை மருத்துவமனையிலேயே இருந்துள்ளனர்.
நெருக்கடியான தருணத்தில் H.ராஜாவுக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், உயர் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உடனிருந்து உதவியவர்கள், அந்த தருணத்தில் ஆறுதலாகவும், ஆதரவாகவும் மருத்துவமனையில் உடனிருந்த பாஜக தலைவர்கள் அனைவருக்கும் முதற்கண் எங்களது இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு எச்.ராஜா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
