அடையாளம், சாரம், சொல், செயல் என அனைத்திலும் இந்தியா மெல்ல மெல்ல பாகிஸ்தானைப் போலவே மாறிவருகிறது. ஒரே ஒரு வித்தியாசம், அங்கே முஸ்லிம்கள் ஆட்சி செய்கிறார்கள்; இங்கே சக குடிமக்கள்மீது இந்துக்கள் ஆட்சி செய்கிறார்கள்.
ராமச்சந்திர குஹா
சுதந்திரம் பெற்று, தேசப் பிரிவினையும் நடந்த இரண்டு மாதங்கள் கழித்து 1947, அக்டோபர் 15 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அன்றைய மாகாண முதல்வர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். “பாகிஸ்தானிடமிருந்து வரும் தூண்டுதல்கள் எதுவாக இருந்தாலும், அங்கே முஸ்லிம் அல்லாதவர்கள் மீது சுமத்தப்படும் கொடுமைகள் எதுவாக இருந்தாலும், நம் நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரை நாம் நாகரீகமான முறையிலேயே நடத்த வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் அவர்களுக்குப் பாதுகாப்பையும், குடிமக்களுக்கான உரிமைகளையும் நாம் வழங்க வேண்டும்.”
மதச்சார்பின்மை, சிறுபான்மையினருக்கான சம உரிமைகள் ஆகியவை மீதான நேருவின் இந்த உறுதிப்பாடு, அவரது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயேகூட அனைவருக்கும் உடன்பாடானதாக இருக்கவில்லை. அங்கேயும் பழமைவாத இந்துக்கள் கணிசமாக இருந்தார்கள். இருப்பினும், அவர் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.), ஜனசங்கம் போன்ற இந்துத்துவ சக்திகளை ஓரங்கட்டக் கடுமையாக உழைத்தார்.

அவரது மறைவுக்குப் பின்னரே ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஜனசங்கத்தின் வாரிசான பாரதிய ஜனதா கட்சியும் செல்வாக்குடன் வளரத் தொடங்கின. இதன் விளைவாக, ஆகஸ்ட் 1947க்குப் பிறகு பாகிஸ்தானிடமிருந்து மாறுபட்ட, அனைவரையும் உள்ளடக்கிய பாதையில் செல்ல விரும்பிய நம் நாடு, இன்று பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது.
முஸ்லிம்களை ஓரங்கட்டுதல்
இன்றைய இந்தியாவின் பெரும்பான்மைவாதப் போக்குக்கு ஒரு சான்று… கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட முஸ்லிம் அல்லர். நரேந்திர மோடி, அமித் ஷாவின் கீழ், பாஜக ‘இந்து வாக்கு வங்கியை’ உருவாக்க முயன்றுள்ளது. இந்துக்களின் ஆதரவை மட்டுமே கொண்டு தேர்தல்களைச் சந்தித்து வெற்றியும் பெற்றுள்ளது. ‘இந்துக்களுக்கே முன்னுரிமை’ என்ற அரசியல் அவர்களை ஒருமுறை அதிகாரத்திற்குக் கொண்டுவந்த பிறகு, இந்திய முஸ்லிம்களை (சில நேரங்களில் இந்தியத் தலித் கிறிஸ்தவர்களையும்) துன்புறுத்துவதன் மூலமும், அவர்களைத் தீயவர்களாகச் சித்தரிப்பதன் மூலமும் சங் பரிவார் தனது ஆதிக்கத்தைச் சமூக ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் முக்கியமான அமைச்சரவைப் பதவிகளை வகித்தனர். பெரிய அரசுத் துறைகளை (ராஜதந்திரப் பிரிவு, உளவுத்துறை உள்ளிட்டவை) நடத்தினர். உச்ச நீதிமன்றத்திற்கும் இந்திய விமானப்படைக்கும் தலைமை தாங்கினர். ஏன், நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திலேயே இரண்டு நகரங்கள் முஸ்லிம்களைத் தங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தது இன்றும் நினைவில் உள்ளது. ஆனால் இப்போது, பொது வாழ்வில் முக்கியத்துவமான இடங்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை.
உழைக்கும் வர்க்க முஸ்லிம்களைப் பொறுத்தவரை, அவர்கள் வீட்டுவசதியிலும் வேலைவாய்ப்பிலும் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அன்றாட அவமானங்களையும், கேலிப்பேச்சுகளையும் சந்திக்கிறார்கள். இது பல நேரங்களில் கும்பல் வன்முறை (lynching), வீடுகள் இடிப்பு போன்ற துல்லியமான இலக்கு கொண்ட வன்முறையாக மாறுகிறது.
பரவும் இந்துப் பெரும்பான்மைவாதம்
இந்துப் பெரும்பான்மைவாதம் சட்ட ரீதியாகவும் வெளிப்படுகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) தெளிவாக முஸ்லிம்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டியது. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தின் முதலமைச்சர் காவி உடை அணிந்திருப்பதிலும், புதிய ராமர் கோவில் திறப்பு விழாவை பிரதமர் முன்னின்று நடத்துவதிலும் இந்தப் பெரும்பான்மைவாதம் அப்பட்டமாகத் தெரிகிறது.

வலிமைமிக்க அரசியல்வாதிகளின் இத்தகைய சமிக்ஞைகள், உயர்மட்ட அரசு அதிகாரிகளையும் அரசியலமைப்பு நெறிகளை மீறத் தூண்டுகிறது. அவர்கள் தங்களை முதலில் இந்துக்களாகவும், பிறகே இந்தியர்களாகவும் கருதிச் செயல்படுகிறார்கள். இந்துத்துவம் மக்கள் கலாச்சாரத்திலும் ஊடுருவியுள்ளது. ஒரு காலத்தில் மதச்சார்பின்மையின் கோட்டையாக இருந்த பாலிவுட், இப்போது இந்து அல்லாதவர்களைத் தாழ்வாகச் சித்தரிக்கும் திரைப்படங்களைக் காட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.
பெரும்பான்மைவாத வெறுப்பின் வெளிப்படையான முழக்கங்கள் அசாம், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது பாஜகவின் பிரச்சாரங்களில் தென்பட்டன. குறிப்பாக இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர், அசாம் முதலமைச்சர் ஆகியோரின் உரைகள், இந்துக்களின் மனதிலும் இதயத்திலும் இந்திய முஸ்லிம்கள் மீதான வெறுப்பைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தன. உயர்மட்ட நீதித்துறை இந்த அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது. இது நமது பொது நிறுவனங்களின் தார்மீகச் சிதைவின் அறிகுறியாகும்.
அரசியல், சட்டம், அடையாளம், செயல் என அனைத்திலும் இந்தியா பாகிஸ்தானைப் போலவே மாறிவருகிறது. இங்கே இந்துக்கள் மற்ற மதத்தைச் சேர்ந்த குடிமக்கள் மீது ஆட்சி செய்கிறார்கள். இந்துப் பெரும்பான்மைவாதத்தின் இந்த ஆதிக்க நிலை மே 2014இலிருந்து மட்டுமே தொடங்கியது என்று சொல்லிவிட முடியாது.
ஆழமான வேர்கள்
இதற்குப் பழமையான வேர்கள் உள்ளன. இந்துத்துவத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. 19ஆம் நூற்றாண்டின் இந்து மிஷனரி சங்கங்களின் செயல்பாடுகள், 20ஆம் நூற்றாண்டின் இந்து மகாசபை மற்றும் 1925இல் ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்டது ஆகியவை இதன் முக்கிய மைல்கற்கள்.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த ஆண்டுகளில் இந்துத்துவம் ஒடுங்கியிருந்தது. ஆனால் அது எப்போதும் பின்னணியில் இருந்துகொண்டுதான் இருந்தது. நேருவுக்குப் பிந்தைய காங்கிரஸ் செய்த தவறுகளால் இந்து வலதுசாரிகள் வளர வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ராஜீவ் காந்தி இதில் பெரும் பங்கு வகித்தார். அவர் ஒருபுறம் ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து முஸ்லிம் தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்தினார். மறுபுறம் பாபர் மசூதிக்கு அருகில் இருந்த அயோத்தியின் சிறிய சன்னிதியின் பூட்டுகளைத் திறந்து விட்டு இந்து தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்த முயன்றார்.

இந்தத் தவறான செயல்களைப் பற்றி அப்போதே பத்திரிகையாளர் நீர்ஜா சௌத்ரி எச்சரித்தார். “தேர்தல் ஆதாயத்திற்காக இரு சமூகங்களையும் திருப்திப்படுத்தும் அரசின் கொள்கை ஒரு நச்சுச் சுழற்சி. இதை உடைப்பது கடினமாகிவிடும்” என்றார். இடதுசாரி எம்பி சைபுதீன் சௌத்ரி இன்னும் நேரடியாகவே சொன்னார்: “ராஜீவ் காந்தி இந்தியாவை 21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வதாகப் பேசுகிறார், ஆனால் அவரது செயல்கள் அவர் முல்லாக்கள், இந்துப் புரோகிதர்கள் ஆகியோரைப் போன்ற பழமையான மனநிலை கொண்டவர் என்பதையே காட்டுகின்றன.”

நேரு அரசியலிலிருந்து மதத்தைத் தள்ளி வைக்கப் போராடினார். அவரது பேரன் அதை உள்ளே கொண்டுவந்தார். ராஜீவ் காந்தியின் கொள்கைகள் பாஜகவிற்கே சாதகமாக அமைந்தன. ஒருமுறை அரசு மதத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படத் தொடங்கியதும், மக்கள் தொகையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு காரணமாக முஸ்லிம் தீவிரவாதிகளைவிட இந்து தீவிரவாதிகளே அதிகம் பயனடைவார்கள் என்பது தவிர்க்க முடியாதது.
அயோத்தியில் பூட்டுகள் திறக்கப்பட்டது, பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் பிரம்மாண்டமான ராமர் கோவிலைக் கட்ட நாடு தழுவிய இயக்கத்தைத் தொடங்க சங்கப் பரிவாரத்திற்குத் தைரியத்தைக் கொடுத்தது. 1984 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வென்ற பாஜக, ஒன்றரை தசாப்தத்திற்குள் நாட்டின் முன்னணிக் கட்சியாக உருவெடுத்தது.
இந்துக்களுக்கே முன்னுரிமை

முதல் பாஜக பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெரும்பான்மைவாத உணர்வுகள், அவர் பல கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியிருந்ததால் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் இரண்டாவது பாஜக பிரதமர் (மோடி) தொடர்ந்து இரண்டு முறை நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றார். மூன்றாவது முறை சற்று இடங்கள் குறைந்தபோதிலும், அவர் ‘இந்துக்களுக்கே முன்னுரிமை’ என்ற தனது திட்டத்தைச் செயல்படுத்துவதில் கறாராக இருக்கிறார்.
நரேந்திர மோடியும் அவரது வலது கரமான அமித் ஷாவும், அரசியலை அவ்வப்போது வந்து போகும் ஒரு விஷயமாகக் கருதும் தற்போதைய காங்கிரஸ் வாரிசுகளை விட, கொள்கை ரீதியாகவும் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் அதிக உறுதியுடன் உள்ளனர். இதன் விளைவாக, சங்கப் பரிவாரத்தின் செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்துவருகிறது. காங்கிரஸ் தேய்ந்து சிதைந்துவருகிறது.
இந்தியாவில் இப்போது நடப்பது ஒரு “கலாச்சார மறுமலர்ச்சி” (civilisational renaissance) என்று இந்து வலதுசாரிக் கொள்கையாளர்கள் கூறுகிறார்கள். இது முற்றிலும் உண்மையல்ல. பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அறிவார்ந்த சிந்தனைகளுக்கு எதிரானவர்கள். இந்தியக் கலை, கட்டிடக்கலை, இசை அல்லது தத்துவத்தின் மகத்தான சாதனைகளில் அவர்களுக்குப் பெரிய ஆர்வம் இல்லை. அவற்றை நவீன உலகிற்குப் பொருத்தமானதாக மாற்றும் விருப்பமும் அவர்களுக்கு இல்லை. அவர்களின் ஆர்வம் எல்லாம் இந்துக்கள் அல்லாத இந்தியர்களை விட, குறிப்பாக முஸ்லிம்களை விட இந்துக்கள் அரசியல், பொருளாதாரம், சட்டம் ஆகியவை ரீதியாக மேலானவர்கள் என்று பறைசாற்றுவதிலேயே உள்ளது.
இன்று நாம் இந்தியாவில் காண்பது கலாச்சார மறுமலர்ச்சி அல்ல; அப்பட்டமான பெரும்பான்மைவாதத் திட்டத்தின் வெளிப்பாடு. 2026இல் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும் சூழலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இதை மாற்ற முடியுமா? எதிர்காலத்தில் மதச்சார்பற்ற அரசை வளர்க்க முடியுமா? வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இதற்கான பதிலைச் சொல்வது கடினம். மற்ற நாடுகளின் அனுபவத்தைப் பார்க்கும்போது, மதத்தையும் அரசையும் இணைப்பது எங்கும் நல்ல பலனைத் தரவில்லை என்பது புரிகிறது.
பெரும்பான்மைவாதத்தின் தீமைகள்

இஸ்லாத்தை பாகிஸ்தானின் அடையாளமாக மாற்றியது அதன் பொருளாதார, அரசியல் எதிர்காலத்தை வெகுவாகப் பாதித்தது. வங்கதேசம், தான் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற கொள்கைகளைக் கைவிட்டது அதற்குப் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. ஈரான் வளர்ந்த நாடாக மாறுவதற்கான அனைத்து பொருளாதார, கலாச்சாரத் தகுதிகளையும் கொண்டிருந்தது; ஆனால் 1979இல் அடிப்படைவாத அயதுல்லாக்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டது.
பெரும்பான்மைவாதத்தால் இஸ்லாமிய நாடுகள் மட்டுமின்றி இதர நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 1970களில் கல்வி, சுகாதாரம், பாலினச் சமத்துவம் ஆகியவற்றில் இலங்கை இந்தியாவைவிட முன்னிலையில் இருந்தது. சிங்கள பௌத்த பேரினவாதம் தோன்றாமல் இருந்திருந்தால், அது உள்நாட்டுப் போரைத் தூண்டாமல் இருந்திருந்தால், பெங்களூரு, ஹைதராபாத் போல கொழும்பு மற்றும் கண்டி நகரங்களும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் மையங்களாகத் திகழ்ந்திருக்கும்.
இறுதியாக, நமது இந்துத்துவச் சகோதரர்களுக்கு மிகவும் பிடித்தமான இஸ்ரேல் நாடு, நவீன யூத மதத்தின் பிற்போக்குத்தனமான போக்கினால் தூண்டப்பட்ட போர்க்குற்றங்களால் உலக அரங்கில் ஒதுக்கப்பட்ட நாடாக மாறிவருகிறது.
பெரும்பான்மையினரின் மதத்தைத் தேசத்தின் அடையாளமாக மாற்றுவதும், முல்லாக்கள், பூசாரிகள், துறவிகள் அல்லது ரபிக்களின் விருப்பப்படி சட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்குவதும் சன்னி, ஷியா, பௌத்த அல்லது யூத நாடுகள் என எங்குமே பேரழிவைத்தான் தந்துள்ளன. இந்துக்கள் மட்டும் இந்த விதிக்கு விதிவிலக்கு என்று கருதுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
ராமச்சந்திர குஹா, வரலாற்றாய்வாளர், எழுத்தாளர்
