தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட அதிமுக, பாஜக வென்று விட கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் SIR நடவடிக்கையை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், “SIR குறித்து முதலில் எதிர்ப்பை பதிவு செய்தவர் நம் முதல்வர் ஸ்டாலின் தான். IT, ED போன்றவற்றை கொண்டு வந்து அடக்கு முறையை முன்னெடுத்தனர். ஆனால் தோல்வியை தழுவியதால் தற்போது இந்த SIR மூலம் அடக்கு முறையை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்திய தேர்தல் ஆணையம் ஏன் அவசரமாக இதனை முன்னெடுத்தார்கள்? SIR நடவடிக்கைக்கு இந்த கால அவகாசம் போதாது என்று தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். அப்படி இருந்தும் அதனை செய்கிறார்கள்.
பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியதை போல தமிழகத்திலும் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். அதேசமயம் எல்லாவற்றையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று கூறும் ஒன்றிய அரசு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையத்தை பாஜக கையில் வைத்துள்ளது. பல்வேறு திட்டங்களை அளித்த திமுக அரசு மீண்டும் வென்று விட கூடாது என்பதற்காகதான் இதையெல்லாம் செய்கிறார்கள்.
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி கண்ணை மூடிக்கொண்டு SIR க்கு ஆதரவு தெரிவிக்கிறார். அதிமுகவிற்கு இதுதான் இறுதி தேர்தல் என்பதை நாம் செய்து காட்ட வேண்டும்.
2026ல் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வெற்றி பெற்று விட கூடாது” என்று ஆவேசமா தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “கோவை மாநகரில் உள்ள ஒவ்வொரு பகுதியில் இருந்தும், குறைந்தது 10 அரசுப் பேருந்துகள், திமுக ஆர்ப்பாட்டத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. திமுகவினரின் இந்த அதிகார துஷ்பிரயோகம் காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், போதுமான பேருந்துகள் இன்றி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். திமுகவினர், பொய்யான கூட்டம் காட்டி, முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை ஏமாற்ற, சாதாரண பொதுமக்களைத் துன்புறுத்துவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற அதிகார அத்துமீறல்களை, திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
