தீபாவளிப் படங்களில் முதலில் முதலிடத்தில் வந்த DUDE படக்குழு முன்பே வெற்றி விழா நடத்தி கொண்டாடிய நிலையில் , கடந்த வெள்ளிக்கிழமை புதுப் படங்கள் எதுவும் பெரிதாக வராத நிலையிலும் இரண்டு படங்களுக்குமே வசூல் குறைந்த நிலையில் பைசன் படக்குழுவும் நன்றி சொல்லும் விழா நடத்தினார்கள்.
படத்தில் இந்திய கபடி அணியின் முன்னாள் வீரர் ராஜரத்தினம் பாத்திரத்தில் நடித்து இருந்த பிரபஞ்சன் நிஜமாகவே பெரிய கபடி வீரராம் . புரோ கபடி அணிகள் ஆடியவராம். ”அவர் இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்கலாம் . அவ்வளவு சிறப்பாக நடித்தார்” என்று மாரி செல்வராஜ் சொல்ல, மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனார் பிரபஞ்சன்.
“நான் மட்டுமல்ல . என் குடும்பமே மாரி செல்வராஜ் படங்களின் ரசிகர்கள். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்” என்றார் . (அப்போ இனிமே கபடி இல்லீங்களா பிரபஞ்சன்?)
அதேபோல் படத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் கொண்ட ஆத்திரத்தில் அவர்கள் சாமிக்கு நேர்ந்துவிட்ட ஆட்டையே வெட்டிப் போடும் கொடூர கேரக்டரில் நடித்தவர் படத்தின் அசோசியேட் டைரக்டர்.
”இந்தப் படத்துக்காக இரண்டரை ஆண்டுகள் காத்திருந்தேன் ”என்றார் துருவ். மாரி செல்வராஜ் எழுத்து மற்றும் மேக்கிங் இரண்டிலுமே அசத்தி இருந்ததை எல்லாரும் கொண்டாடி இருந்தார்கள்
இப்படி பல பெருமைக்குரிய ‘காளமாடன்கள்’ நன்றி அறிவிப்பு விழாவில் இருந்தாலும் (பா.ரஞ்சித்தின் அறிவார்ந்த பேச்சு உட்பட) , மாரி சொன்ன ஒரு விசயம்தான் கலர் மாறி, பைசன் ஆகி விட்டது
”அமீர் பெரிய சம்பளம் கேட்டு அது கொடுத்தால்தான் நடிப்பேன் என்றார். அதைக் கொடுத்துதான் கூட்டி வந்தோம் ” என்று மேடையில் மாரி போட்டு உடைத்தது கூட இப்போது எல்லாம் பல விழாக்களில் பலருக்கும் நடக்கும் விசயம்தான் .
ஆனால் அடுத்த கட்டமாக மாரி செல்வராஜ் ” நான் தினமும் எல்லாருக்கும் நிறைய அவார்டு கொடுப்பேன் . சில சமயம் என்கிட்ட ஒரே நாள்ல பத்து அவார்டு வாங்கின ஆள் கூட உண்டு. ஆனா என் கிட்ட அதிக அவார்டு வாங்கிய ஆள் இந்தப் படத்தின் இசையமைப்பளார் நிவாஸ் பிரசன்னா தான். ஏகப்பட்ட அவார்டு வாங்குவான். அவ்வளவு அவார்டையும் வாங்கிக்கிட்டு ஐ லவ் யூ சார்ன்னு மெசேஜ் போடுவான். நான் பதிலே சொல்ல மாட்டேன் . அப்பவும் தினமும் போடுவான்.
என் மனைவி கூட , ‘ ஒரு மனுஷன் இவ்வளவு ஐ லவ் யூ சொல்றாரு . ஒரு தடவை நீங்க திரும்பி சொன்னா என்னவாம் ?’ என்று கேட்பார் ..” என்றார் .
அவார்டு என்றதும் ரெண்டு பவுன் கோல்டு மெடல் , ஐம்பாதாயிரம் ரூபாய் பணம் என்று நினைத்து விடாதீர்கள் . கன்னா பின்னா என்று திட்டுவது . அதன் பின்னால் சில கெட்ட வார்த்தைகளும் இருக்கலாம் கண்ணா !
