பறவைக் காய்ச்சல் எதிரொலி.. ஹாஃப் பாயில் விரும்பிகளே கவனம் – மா. சுப்பிரமணியன் தகவல்

Published On:

| By Pandeeswari Gurusamy

பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஹாஃப்-பாயில் சாப்பிட வேண்டாம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன. இவற்றின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் H5N1 பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பறவை காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்ட நிலையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பறவை காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியிருந்தது.

அந்தத் தகவல் கிடைத்தவுடன், காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென இறந்ததால், அதனைப் பார்ப்பவர்கள் உடனடியாக ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மனிதர்களில் யாருக்கும் இதுவரை பாதிப்பு கண்டறியப்படவில்லை.

ADVERTISEMENT

பறவை காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹாஃப் பாயில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிடுவது அவசியம். திடீரென உயிரிழக்கும் கோழிகளின் இறைச்சியை உண்ண வேண்டாம். மாவட்ட அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share