வைஃபை ஆன் செய்ததும், “வடக்க வெடிச்ச வெடியால தெக்க இடி இடிச்சதாம்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்ன இன்னைக்கு புதுசா பழமொழி எல்லாம்? வடக்கன்னா பீகார் ரிசல்ட்டா?
ஆமா.. பீகார் தேர்தல் ரிசல்ட் தெறித்தனமான இருக்கே.. பாஜக- ஜேடியூ கூட்டணி அமோகமாக அறுவடை செஞ்சிருக்கு.. ராகுல் அவ்வளவு நீச்சலடிச்சு பிரசாரம் செஞ்சும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட்தான்.. பாவம்யா.. ராகுலுடன் சேர்ந்த தேஜஸ்வியின் ஆர்ஜேடியும் படுபாதாள குழியில விழுந்துருச்சே..
சரி.. பரிதாப்பட்டது போதும்.. வடக்கதான் வெடி வெடிச்சுட்டாங்க.. தெக்க எங்க இடி இடிச்சது?
சொல்றேன்யா.. பீகார் ரிசல்ட் பத்தி திமுகவின் மூத்த அமைச்சர்கள், சீனியர்கள் எல்லாம் டிஸ்கஷன் செஞ்ச கையோடு சிஎம்கிட்டயும் பேசி இருக்காங்க..
இந்த ஆலோசனைகளில் பேசிய திமுக சீனியர்கள், “பீகாரில் ஆர்ஜேடி தேஜஸ்விகிட்ட காங்கிரஸ் ரொம்பவே மல்லுகட்டி அதிக சீட் கேட்டுச்சு.. காங்கிரஸுக்கு அதிக சீட் கொடுத்தா தோல்வி கன்பார்முன்னு தேஜஸ்வி ரொம்பவே பிடிவாதம் பிடிச்சும் பார்த்தாரு.. ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால 61 சீட் வாங்கி காங்கிரஸ் போட்டியிட்டுச்சு.. இப்ப என்னடான்னா 5 சீட்டுதான் ஜெயிச்சுருக்கு.. குழியையும் பறிச்சது இல்லாம குதிரையையும் கீழே தள்ளிவிட்ட கதையா தேஜஸ்வி கட்சிக்கும் அடி விழுந்துருக்கு.. ராகுல் காந்திக்கு இவ்வளவுதான் செல்வாக்கு போல..
பீகாரை விட காங்கிரஸ் கட்சிக்கு நம்ம ஸ்டேட்ல கொஞ்சம் பரவாயில்லாம ஓட்டு இருக்கு .. அதுக்காக அதிகமான சீட்டு, ஆட்சியில பங்குன்னு எல்லாம் பேசிகிட்டு இருந்தா பீகார் நிலைமைதான் நமக்கும் வரும்.. இந்த ரிசல்ட் நமக்கு நல்ல பாடம்தான்” என பேசியிருக்கின்றனர்.
அத்துடன் சிஎம்மிடம் பேசும் போது, “பீகாரில் நிதிஷ்-பாஜக கூட்டணியை ஜெயிக்க வைச்சதே மகிளா ரோஜ்கர் யோஜனா ஸ்கீம்தான்.. நாம மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி கொடுப்பது மாதிரி.. அங்க வீட்டு பெண்களுக்கு ரூ10,000 கடன் கொடுத்தாங்க.. இந்த கடனை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ10 லட்சம் வரை தருவோம்னு சொன்னாங்க..
கடைசி நேரத்துல இந்த கடன் ரூ10,000-த்தை பெண்கள் திருப்பி செலுத்த வேண்டாம்னு நிதிஷ் கட்சி பிரசாரமும் செஞ்சது.. இதுதான் ஜாதி, மதம் பார்க்காமல் பெண்கள் ஓட்டுகளை சுனாமி போல நிதிஷ்-பாஜக கூட்டணிக்கு அள்ளி கொட்டிவிட்டு போயிருக்கு” என சுட்டிக்காட்டி இருக்கின்றனர் மூத்த அமைச்சர்கள்.
ஏற்கனவே, “ஏடிஎம்கே ஆட்சியில பொங்கல் பரிசுத் தொகையாக ரூ1,000 பணமும் பொருட்களும் தந்தாங்க.. நாம ஆட்சிக்கு வந்த பிறகு பணம் தரலை.. பொருட்களை மட்டும்தான் தந்தோம்..
அதுவும் கூட வெல்லம் தண்ணியா இருக்குன்னு தொடங்கி ஒவ்வொரு பொருளும் தரமே இல்லைன்னு ரொம்பவே அதிருப்திதான்..
இதை எல்லாம் சரி கட்டனும்னா பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ3,000 கொடுத்துவிடலாம்”னும் அமைச்சர்கள் ஆலோசனை சொல்லி இருந்தாங்க..
இதுபற்றி கோட்டை அதிகாரிகளிடம் நாம் பேசுனப்ப, “பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ3,000 கொடுக்கிறதுக்கான சோர்ஸ் பண்ட் பற்றி சிஎம் ஏற்கனவே கேட்டாரு.. நிதித்துறை அதிகாரிகளோ, அவ்வளவு பண்ட் இருக்காதேன்னு தயங்கி இருக்காங்க.. அதிகபட்சமாக ரூ1,000 தரும் அளவுக்குதான் நிதி நிலைமை இருக்குன்னும் சொல்லி இருக்காங்க..
இதை கேட்டுகிட்ட சி.எம், பொங்கல் பரிசுத் தொகை ரூ2,000 கொடுக்கலாம்.. அதுக்கான நிதி ஏற்பாடுகளை கவனியுங்க சொல்லி இருக்காரு.. அதனால கூடிய சீக்கிரமே பொங்கல் பரிசுத் தொகை ரூ2,000 பற்றிய அறிவிப்பு வெளியாகப் போகுது” என்றனர்.
மேலும், “நம்ம ஸ்டேட்ல ரொம்பவே எபெக்ட்டிவ்வாக இருக்கிற மகளிர் உரிமை திட்டம் பற்றியும் அதிகாரிகள்கிட்ட சிஎம் டிஸ்கஷன் செஞ்சாரு.. இப்ப மகளிர் உரிமைத் தொகை ரூ1,000 கொடுக்கிறோம்..
ஜனவரியில் இருந்து விடுபட்ட மகளிர் சுமார் 20 லட்சம் பேருக்கும் தரப் போறோம்னு அதிகாரிங்க சொன்னாங்க..
அப்ப சிஎம், “இந்த மகளிர் உதவித் தொகையை ரூ1,500-ன்னு எல்லோருக்கும் ஜனவரியில் இருந்து உயர்த்தி கொடுத்துடலாமா?”ன்னு கேட்டு அதிகாரிகள் கருத்தையும் வாங்கி இருக்கிறாரு..
அதனால பொங்கல் பரிசுத் தொகை, மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்புன்னு அடுத்தடுத்த 2 அறிவிப்புகள் எந்த நேரத்திலும் அதிரடியாக வரலாம்”னும் கோட்டை சோர்ஸ்கள் நம்மிடம் ஷேர் செஞ்சாங்கப்பா..
என்னப்பா ஒரே மூச்சாக சொல்லி முடிச்சுட்ட.. பீகார் ரிசல்ட் பற்றி அதிகாரிகள் என்ன பேசுறாங்க..
“பீகாரில் நல்ல கவர்மென்ட்டை கொடுத்ததால நிதிஷ்குமாருக்கு ஆட்சி தொடர வாய்ப்பு கிடைச்சுருக்கு.. அதைவிட ரொம்பவே பெட்டராத்தான் நம்ம ஸ்டேட் கவர்மென்ட் இருக்கு.. அப்படிப்பார்த்தா திமுக ஆட்சிதான் மீண்டும் வரும்”னு சில ‘தலைமை’ அதிகாரிகள் நம்பிக்கையோடு பேசுறாங்களாம்யா..
பீகார் ரிசல்ட்டை அதிமுக எப்படி பார்க்குதாம்?
அதிமுகவோட மூத்த தலைவர்கள் சிலரிடம் நாம் பேசுனப்ப, “பீகார் ரிசல்ட் பார்த்துட்டு அண்ணன் (இபிஎஸ்) ரொம்ப சந்தோசமா இருக்கிறாரு.. பீகாரில் நிதிஷ்குமாருக்கு கை கொடுத்தது மகளிர் கடனுதவி திட்டம்.. அதை தொடங்கி வெச்சதே பி.எம் மோடிதான்.. எலக்ஷனுக்கு முன்னாடி செப்டம்பரில்தான் அதை அறிவிச்சாங்க.. அதே மாதிரி மெகா ஸ்கீமை இங்கேயும் தேர்தல் நேரத்துல மோடி அறிவிப்பாரு.. மோடி வெளியிடப் போகும் அதிரடியான திட்டங்களால நம்ம ஸ்டேட்டும் திக்கு முக்காடும்னு நம்பிக்கையாகவே இருக்கிறாரு” என்கின்றனர்.
ஓஹோ.. காங்கிரஸ்- தவெக கூட்டணி பற்றி எல்லாம் தீவிரமாக பேசுனாங்களே.. அவங்க ரியாக்சன்?
ஆமாய்யா… திமுக கூட்டணியில் இருந்து நாளைக்கே காங்கிரஸ் வெளியேற போற மாதிரியும் தமிழகம் முழுவதும் அந்த குழு இந்த குழு பயணிக்க போகுதுன்னும் தவெக கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சிகாரர்களிடம் கருத்து கேட்குதுன்னும் ஏகப்பட்ட நியூஸ்பா..
இப்படியான நிலையில பீகார் ரிசல்ட் இடியா தலையில விழுந்துருக்கேன்னு விசாரிச்சப்போ, ” இப்படி எல்லாம் தவெக கூட்டணி பற்றி காங்கிரஸ் தரப்புல இருந்தே சிலர்தான் கிளப்பிவிட்டாங்க.. அவங்க அலப்பறைகள் எல்லாம் முளையிலேயே கருகிடுச்சுன்னு சொல்ற மாதிரி பீகார் ரிசல்ட் அவங்களை அடிச்சு மூலையில உட்கார வெச்சிடுச்சுன்னு” கதர் பிரமுகர்களே சொல்றாங்கய்யா..
காங்கிரஸ் கூட்டணி, பீகார் ரிசல்ட் பற்றி தவெக தரப்பு என்ன நினைக்குதாம்?
தவெகவில் விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசுனப்ப, “பீகாரில காங்கிரஸுக்கு ஒரு சீட்தான் கிடைச்சுருக்கு.. அவங்க கூட கூட்டணி வெச்ச தேஜஸ்விக்கு ரொம்பவே அடி.. அப்ப காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சா எங்களுக்கும்தானே அடி விழும்.
நாங்கதான் தனிச்சே போட்டியிட்டாலும் தளபதி சிஎம் ஆகிடுவாருன்னு நம்பிக்கையா இருக்கோமே.. எங்களுக்கு எதுக்கு தேவையில்லாத ஆணி மாதிரி காங்கிரஸ்?” என முகத்தில் அறைந்தது போல பளிச்சென பேசுவதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
