பீகார் சட்டமன்றத் தேர்தலின் (Bihar Election 2025) முதல் கட்டம் சில வன்முறை சம்பவங்களைத் தவிர்த்து நேற்று (நவம்பர் 6) பொதுவாக அமைதியாக நிறைவடைந்தது. பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று இரவு 8.45 மணி வரை 64.66% வாக்குகள் பதிவாகின.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர், பீகாரில் முதல் முறையாக 100% வாக்குச்சாவடிகளிலும் நேரடி ஒலிபரப்பு மூலம் வாக்குப்பதிவை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து தலைமை அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேரில் தொடர்பு கொண்டார்.
மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 3.75 கோடியாகும்.
முதன்முறையாக பீகாரில் சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டம் (IEVP) அமல்படுத்தப்பட்டது. இதன் கீழ் தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பெல்ஜியம், கொலம்பியா ஆகிய 6 நாடுகளின் 16 சர்வதேச பிரதிநிதிகள் பீகார் வாக்குப் பதிவை நேரில் பார்வையிட்டனர்.
மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. பீகார் முதல் கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 90,000க்கும் மேற்பட்ட Jeevika Didis எனப்படும் பெண் தன்னார்வலர்கள் மற்றும் ஒரு மத்திய பாதுகாப்புப் படை வீரர் நியமிக்கப்பட்டு, புர்தா அணிந்த பெண் வாக்காளர்களின் (Purdahnasheen women) அடையாளங்களை உறுதி செய்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் செல்போன்களைப் பாதுகாக்கும் வசதி (Mobile deposit facility) ஏற்பாடு செய்யப்பட்டது.
பீகார் தேர்தல்களில் வாக்குப் பதிவு விவரம்:
லோக்சபா பொதுத் தேர்தல் (1951 – 2024)
| ஆண்டு | வாக்குப் பதிவு % | குறிப்பு |
|---|---|---|
| 1951-52 | 40.35 | மிகக் குறைவு |
| 1957 | 40.65 | — |
| 1962 | 46.97 | — |
| 1967 | 51.53 | — |
| 1971 | 48.96 | — |
| 1977 | 60.76 | — |
| 1980 | 51.87 | — |
| 1984 | 58.80 | — |
| 1989 | 60.24 | — |
| 1991 | 60.35 | — |
| 1996 | 59.45 | — |
| 1998 | 64.60 | மிக அதிகம் |
| 1999 | 61.48 | — |
| 2004 | 58.02 | — |
| 2009 | 44.47 | — |
| 2014 | 56.26 | — |
| 2019 | 57.33 | — |
| 2024 | 56.28 | — |
சட்டமன்றத் தேர்தல் (1951 – 2020)
| ஆண்டு | வாக்குப் பதிவு (%) | குறிப்பு |
|---|---|---|
| 1951-52 | 42.60 | மிகக் குறைவு |
| 1957 | 43.24 | — |
| 1962 | 44.47 | — |
| 1967 | 51.51 | — |
| 1969 | 52.79 | — |
| 1972 | 52.79 | — |
| 1977 | 50.51 | — |
| 1980 | 57.28 | — |
| 1985 | 56.27 | — |
| 1990 | 62.04 | — |
| 1995 | 61.79 | — |
| 2000 | 62.57 | மிக அதிகம் |
| 2005 (பிப்.) | 46.50 | — |
| 2005 (அக்.) | 45.85 | — |
| 2010 | 52.73 | — |
| 2015 | 56.91 | — |
| 2020 | 57.29 | — |
