பீகார் முதல் கட்ட தேர்தல்: 121 தொகுதிகள்.. 1,314 வேட்பாளர்கள்.. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடக்கம்

Published On:

| By Mathi

Bihar Election First Phase

பீகார் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலில் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. அலமநகர், மாதேபுரா, சஹர்சா, முசாபர்பூர், கோபால்கஞ்ச், சிவான், சப்ரா, ஹாஜிபூர், வைஷாலி, மாகுவா, தர்பங்கா உள்ளிட்ட 121 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்த முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,191 ஆண்கள், 122 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளர் அடங்குவர். முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 3.75 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். இதற்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் (இந்தியா கூட்டணி) இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி (BJP), ஐக்கிய ஜனதா தளம் (JD(U)), லோக் ஜனசக்தி கட்சி (LJP), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM), மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி (VIP), மற்றும் இடதுசாரி கட்சிகளான CPI, CPI-ML, மற்றும் CPI(M) ஆகியவை உள்ளன.

ADVERTISEMENT

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி (JSP). பல தொகுதிகளில் மும்முனைப் போட்டியை உருவாக்கி உள்ளது.

முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 423 பேர் (32%) தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களில் 354 பேர் (27%) கொலை (33 வேட்பாளர்கள்), கொலை முயற்சி (86 வேட்பாளர்கள்) மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (42 வேட்பாளர்கள்) போன்ற தீவிர கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

ADVERTISEMENT

முக்கிய கட்சிகளில், CPI(ML) கட்சியில் 93% வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள், அதைத் தொடர்ந்து RJD (76%), BJP (65%), காங்கிரஸ் (65%), LJP (ராம் விலாஸ்) (54%), JD(U) (39%) மற்றும் AAP (27%) ஆகிய கட்சிகளில் கிரிமினல் வழக்குகளை சந்திக்கும் வேட்பாளர்கள்.

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியிலும் 44% வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளைக் கொண்டுள்ளனர்.

அதேபோல், முதல் கட்டத்தில் போட்டியிடும் 519 வேட்பாளர்கள் (40%) ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்கள். முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ₹1.99 கோடி ஆகும்.

இதில், முங்கேர் தொகுதியில் இருந்து பாஜகவின் குமார் பிரணய் ₹170 கோடி நிகர மதிப்புடன், மொகாமா தொகுதியில் இருந்து JD(U)-ன் அனந்த் குமார் சிங் ₹100 கோடி நிகர மதிப்புடன், கயா தொகுதியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் நிதிஷ் குமார் சுமார் ₹250 கோடி சொத்து மதிப்புடன், மற்றும் மகாராஜ்கஞ்ச் தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளர் ராஜ் கிஷோர் குப்தா ₹137 கோடி சொத்து மதிப்புடன் களத்தில் உள்ள முக்கியமான கோடீஸ்வர வேட்பாளர்களில் அடங்குவர்.

களம் காணும் விஐபிக்கள்: யார், எந்தத் தொகுதியில்?

தேஜஸ்வி யாதவ் (RJD): மகாகத்பந்தனின் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் RJD தலைவர், ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவின் சதீஷ் குமார் களமிறங்கியுள்ளார்.

சாம்ராட் சவுத்ரி (பாஜக): பீகாரின் துணை முதலமைச்சர் மற்றும் பாஜக தலைவர், தாராபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து RJD சார்பில் அருண்-ஷா களமிறங்கியுள்ளார்.

விஜய் குமார் சின்ஹா (பாஜக): பீகாரின் மற்றொரு துணை முதலமைச்சர், லக்கிசராய் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் சுராஜ் குமார் களமிறங்கியுள்ளார்.

தேஜ் பிரதாப் யாதவ் (ஜன் சக்தி ஜனதா தளம்): லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான இவர், RJD-யிலிருந்து விலகி ஜன சக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி மஹூவா தொகுதியில் போட்டியிடுகிறார்.

அனந்த் குமார் சிங் (JD(U)): “டான்-கம்-பொலிட்டிசியன்” என்று அழைக்கப்படும் இவர், மொகாமா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவரின் போட்டி கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபல பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக வேட்பாளர்) அலினகர் தொகுதியிலும், போஜ்புரி திரைப்பட நட்சத்திரம் கேசரி லால் யாதவ் (RJD வேட்பாளர்) சப்ரா தொகுதியிலும் களமிறங்கியுள்ளனர்.

பீகாரின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ரேணு தேவி (பாஜக) பேட்டியா தொகுதியிலும், ஷ்ரேயாசி சிங் (பாஜக) ஜமாய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பீகாரில் 2-ம் கட்ட சட்டமன்ற தேர்தல் எஞ்சிய 122 த்ஒகுதிகளில் நவம்பர் 11-ந் தேதி நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share