பீகார் சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
பீகாரில் தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கும் நிலையில் அனைவரது பார்வையும் முதல்வர் நிதிஷ்குமாரை நோக்கித்தான் இருக்கிறது. ஆம் முதல்வர் நிதிஷ்குமார் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பதுதான் தேர்தல் களத்தின் பிரதான பேசுபொருள்.
பீகார் மாநிலத்தின் முதல்வராக இதுவரை 9 முறை பதவி வகித்துள்ளார் ஐக்கிய ஜனதா தளம் எனும் ஜேடியூ கட்சித் தலைவர் நிதிஷ்குமார்.
பீகாரில் 2000-ம் ஆண்டு முதல் முறையாக முதலமைச்சர் ஆனார் நிதிஷ்குமார். அப்போது முதல் பாஜக அல்லது காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இடம் பிடித்து முதல்வராகிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது 9-வது முறையாக முதல்வராகவும் பதவி வகிக்கிறார் நிதிஷ்குமார். சுமார் 18 ஆண்டுகளாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் நிதிஷ்குமார்.
இதில் சுவராசியம் என்னவெனில், முதல்வரான பின்னர் இதுவரை ஒரு முறை கூட சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றதே இல்லை என்பதுதான். பீகார் சட்டமேலவை உறுப்பினராகவே இருந்து மாநில முதல்வர் பதவியில் அமர்ந்து வருகிறார் நிதிஷ்குமார்.
1995-ம் ஆண்டுதான் பீகார் சட்டமன்ற தேர்தலில் கடைசியாக நிதிஷ்குமார் போட்டியிட்டார். அப்போது நாளந்தா மாவட்டம், Harnaut சட்டமன்ற தொகுதியில் சமதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார் நிதிஷ்குமார். அதற்கு முன்னர் 1985-ல் இதே தொகுதியில் லோக் தள் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் நிதிஷ்குமார்.
ஆனால் Barh மக்களவை தொகுதியில் 1989, 1991, 1996, 1998, 1999 தேர்தல்களில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று எம்.பியாக பணியாற்றினார் நிதிஷ்.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் இந்த முறையாவது ‘முதல்வர் நிதிஷ்குமார்’ தேர்தலில் போட்டியிடுவாரா? வெற்றி பெறுவாரா? என்பதும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்று.