பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நவம்பர் 5-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு 2020-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து பீகார் மாநில தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
பீகார் தேர்தல் நடைபெறும் நிலையில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுத்தியது. இது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு திருத்தம் மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும்; வாக்குப் பதிவு நேரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் 1,200க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரிக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலை நவராத்திரி விழாக்களுக்குப் பின்னர் நவம்பர் 5-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரையில் 3 கட்டங்களாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.