விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சியில் பரபரப்பான ‘சம்பவம்’ நிகழ்ந்துள்ளது. போட்டியாளர்கள் வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி, ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ன் “டிக்கெட் டு ஃபினாலே” டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் கார் டாஸ்க்கின் போது, வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் சக போட்டியாளரான சான்ட்ராவை தாக்கி காலால் எட்டி உதைத்து காரில் இருந்து தள்ளிவிட்டனர். இதில் சான்ட்ரா உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வி.ஜே.பார்வதி மற்றும் கம்ருதீனை உடனடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 3) வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி இந்த விவகாரம் குறித்துப் போட்டியாளர்களுடன் நேரடியாகப் பேசினார். வன்முறைச் செயல்கள் மற்றும் தரக்குறைவான பேச்சுக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

பின்னர், பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை மீறி வன்முறையில் ஈடுபட்டதற்காக, வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து, உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார் விஜய் சேதுபதி. அவரது இந்த உறுதியான நடவடிக்கை பாராட்டப்பட்டு வருகிறது.
