ராமச்சந்திர குஹா
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 2015-இல், நான் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குச் சென்று பல்வேறு தரப்பு மக்களுடன் பேசினேன். அவர்களில் ஒருவர் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி.
காஷ்மீரிகளுக்குப் பல ஆண்டுகளாக அளித்த வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் நிறைவேற்றத் தவறிய இந்திய அரசாங்கத்தைப் போலல்லாமல், நான் அவருக்கு அளித்த வாக்கைக் காப்பாற்றி வந்ததற்கு அவர் எனக்கு நன்றி தெரிவித்தார்.
கெடுவாய்ப்பாக, புகாரி ஜூன் 2018இல் படுகொலை செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு, இந்திய அரசு சட்டபூர்வமான சூழ்ச்சியின் மூலம், தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநரை ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதி, அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு முழு மாநிலம் ஒரு யூனியன் பிரதேசமாகத் தரமிறக்கப்பட்டது. பாஜக விசுவாசி ஒருவர் லெப்டினன்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
ஒரு அரசியலமைப்பு வாக்குறுதியின் துரோகம்

370ஆவது பிரிவை ரத்து செய்தது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அளித்த அரசியலமைப்பு வாக்குறுதியின் மீதான துரோகமாகும். பாஜக நீண்ட காலமாக 370ஆவது பிரிவை நீக்க வலியுறுத்தி வந்ததால், இது முற்றிலும் எதிர்பாராதது அல்ல. இருப்பினும், இந்தச் சட்டத்தை ரத்து செய்யும்போது, ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை அளிப்பதாக இந்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய வாக்குறுதியை அளித்தது. அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன, அது நிறைவேற்றப்பட்டதற்கான அறிகுறி இல்லை. இந்தத் தாமதம் வெறும் அதிகாரத்துவ அலட்சியம் அல்ல. தீய அரசியல் நோக்கத்தின் வெளிப்பாடு.
பிகாரில் வாக்காளர் பட்டியலைத் திருத்த மோடி-அமித் ஷா அரசு ஒரு மாதமே ஒதுக்கியது. பிகாரின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு கொண்ட ஜம்மு காஷ்மீரில், தேர்தல் நடத்த அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் ஆனது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரின் செலவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்முவுக்குச் சாதகமாகச் சட்டமன்றத் தொகுதிகள் மறுபகிர்வு செய்யப்பட்டன.

காஷ்மீருக்குள், தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மாற்றாக மூன்றாவது, ஏன் நான்காவது கட்சிகளைக்கூட ஊக்குவிக்க பாஜக முயன்றது. காஷ்மீருக்குள்ளேயே பத்திரிகைகள் அடக்கப்பட்டன; சுதந்திரமான பத்திரிகையாளர்கள் காவல்துறையால் துன்புறுத்தப்பட்டனர், கைது செய்யப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். இந்தத் தேர்தல் செயல்முறையைக் கையாள பாஜக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
வாஜ்பாயி காலத்தில் பாஜகவுடன் கூட்டாளியாக இருந்த, ஆனால் மோடியின் பாஜகவை வெறுக்கும் தேசிய மாநாடு கட்சி, சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றது. தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே, உச்ச நீதிமன்றம் ஜம்மு காஷ்மீரில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் முடிவுகள் வெளிவந்து, பாஜகவின் ஜம்மு காஷ்மீர் பிரிவு எதிர்க்கட்சியில் அமர வேண்டியிருந்ததால், மோடியும் ஷாவும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஜம்மு காஷ்மீருக்கு இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக உமர் அப்துல்லா, இருக்கிறார். ஒரு முக்கியமான அடையாளச் செயலாக, தேசிய மாநாடு கட்சி தனது ஒரே இந்து எம்.எல்.ஏ.வைத் துணை முதலமைச்சராக நியமித்தது. ஆனால், முக்கியமான முடிவுகளை எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் தேர்ந்தெடுக்கப்படாத லெப்டினன்ட் கவர்னரின் கைகளில் இருப்பதால், முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தி அங்கு மீண்டும் செழிப்பை உருவாக்கக்கூடிய திசையில் நகர்த்துவதற்கான செயல்பாடுகளில் அதிகம் ஈடுபட இயலாது. முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, உமர் அப்துல்லா பெரும்பாலும் சமரசப் பாதையையே தேர்ந்தெடுத்தார். மோதலைத் தவிர்த்து, லெப்டினன்ட் கவர்னரை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்து, மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க ஒன்றிய அரசிடம் பணிவுடன் வேண்டினார்.
மீறலும் பெரும்பான்மைவாத நோக்கமும்

இருப்பினும், இந்த மாதத் தொடக்கத்தில், அப்துல்லா நேரடியாக லெப்டினன்ட் கவர்னரை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1931 ஜூலை 13 அன்று, மகாராஜா ஹரி சிங்கின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடிய சுமார் 21 காஷ்மீரிகள் மகாராஜாவின் காவல்துறையால் கொல்லப்பட்டனர். அன்று முதல், ஜூலை 13 பள்ளத்தாக்கில் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1
948 இல் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட ஜனவரி 30, இந்தியாவின் பிற பகுதிகளில் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவது போல. ஆனால், இந்த ஜூலை 13 அன்று, அனைத்து அரசியல் சார்புகளையும் கொண்ட காஷ்மீரிகள் அந்த நிகழ்வை நினைவுகூர லெப்டினன்ட் கவர்னர் தடை செய்தார். ஜூலை 13 அன்று முதல்வரைக் காவல்துறை வீட்டிற்குள்ளேயே முடக்கியது. அடுத்த நாள், முதலமைச்சர் ஒரு வேலியைக் கடந்து, புதைக்கப்பட்டிருந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் லெப்டினன்ட் கவர்னரின் ஆணையை மீறினார்.

ஆகஸ்ட் 5, 2019 வரை, ஜூலை 13 ஜம்மு காஷ்மீரில் ஒரு பொது விடுமுறை நாளாக இருந்தது. மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு, அது விடுமுறைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, மகாராஜா ஹரி சிங்கின் பிறந்தநாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. கல்லறையைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட பிறகு, உமர் அப்துல்லா இவ்வாறி ட்வீட் செய்தார்: “ஜூலை 13 படுகொலை எங்கள் ஜாலியன்வாலா பாக். தங்கள் உயிரை ஈந்தவர்கள் பிரிட்டிஷுக்கு எதிராகச் செய்தார்கள். காஷ்மீர் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின் கீழ் ஆளப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய உண்மையான ஹீரோக்கள் இன்று முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக வில்லன்களாகக் காட்டப்படுவது வெட்கக்கேடானது.”
இதிலுள்ள முதல் வாக்கியம் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், மற்ற வாக்கியங்கள் அப்பட்டமான உண்மை. 1857க்கும் 1947க்கும் இடையில், ஏறக்குறைய அனைத்து மகாராஜாக்களும் நவாப்களும் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தனர். சுதேச இந்தியாவின் தரத்தின்படி பார்த்தாலும் மகாராஜா ஹரி சிங் முழுமையான எதேச்சதிகாரி.
அரசுக்கு அப்பால் – ஒரு கூட்டுப் பொறுப்பு
மாநில அந்தஸ்தை மறுப்பது மோடி-ஷா அரசாங்கத்தால் செய்யப்பட்ட ஒரு புனித வாக்குறுதியின் மீதான துரோகம். இருப்பினும், காஷ்மீரிகளின் மீதான இந்த மோசமான அணுகுமுறை இந்த விஷயத்திற்கு அப்பாலும் பரவுகிறது. இந்த மோசமான அணுகுமுறைக்கு அரசின் வெளியே உள்ள இந்தியர்களுக்கும் பொறுப்பு உண்டு. ஆகஸ்ட் 12, 2019 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஜம்மு காஷ்மீரில் தொடர் முதலீடுகளைச் செய்யத் தனது குழு ஒரு “சிறப்பு பணிக்குழு”வை அமைக்கும் என்று உறுதியளித்தார். அது நடப்பதற்கான அறிகுறி இன்னும் இல்லை. மற்ற இந்திய நிறுவனங்களும் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை.
ஜம்மு காஷ்மீரில் தொழில் முதலீடுகள் குறைவாகவே உள்ளன. “காஷ்மீரில் உள்ள கிராமங்கள், நகரங்கள், மாநகரங்கள் முழுவதும், இளம் தொழில் வல்லுநர்கள், பட்டதாரிகள் மற்றும் பள்ளி மாணவர்களும்கூட மெதுவாகத் தங்கள் வீடுகளிலிருந்து மட்டுமல்ல, நம்பிக்கையிலிருந்தும் விலகிச் செல்கின்றனர்” என்று சமீபத்திய டெக்கான் ஹெரால்ட் செய்திக்கட்டுரை கூறுகிறது. இது சிறந்தவர்களும் திறமையானவர்களும் தொடர்ந்து வெளியேற வழிவகுக்கிறது.

இந்திய ஊடகங்களும் இவ்விஷயத்தில் குற்றவாளிகளே. என் அனுபவத்தில், ஜம்மு காஷ்மீர் பற்றிய மிகவும் நம்பகமான தகவல்கள், தேசிய தலைநகர் பகுதியில் தலைமையிடமாகக் கொண்டிராத செய்தித்தாள்கள், இணையதளங்களுக்காக எழுதும் களத்தில் உள்ள நிருபர்களிடமிருந்துதான் வருகின்றன.
காஷ்மீர் விஷயத்தில் குறிப்பாக, தேசியத் தலைநகர் பகுதியிலுள்ள “கோடி மீடியா” (மோடிக்கு விசுவாசமான ஊடகங்கள்) அரசின் முன் வாலைக் குழைத்து மண்டியிடுகிறது. ஒன்றிய அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்திகளைச் செய்தித்தாள்கள் வெளியிடுவதில்லை. புஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒரு அமைதியான இந்தியக் குடிமகன், எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலில் இறந்தபோது, “பாகிஸ்தான் பயங்கரவாதி” என்று சித்தரிக்கப்பட்டது போல, தொலைக்காட்சி சேனல்கள் தவறான தகவல்களையே தீவிரமாக ஊக்குவிக்கின்றன.
ஆகஸ்ட் 5, 2019 முதல் அவர்கள் செய்த – மற்றும் செய்யாத – அனைத்திலும், காஷ்மீரிகள் சுதந்திரமான, சுயமரியாதையுள்ள குடிமக்களாக இல்லாமல், அடிபணிந்த, சாதுவான குடிமக்களாக இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கம் வெளிப்படையாகக் காட்டியுள்ளது. கெடுவாய்ப்பாக, இந்தியத் தீபகற்பத்தின் சாமானிய மக்களும், வருந்தத்தக்க வகையில் பெரும் எண்ணிக்கையில், காஷ்மீர் மக்கள் மீது தங்கள் விரோதப் போக்கைக் காட்டுகிறார்கள்.
இடைவிடாத அவதூறு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிற மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டு கல்லூரிகளிலிருந்து விரட்டப்பட்ட விதம், சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்துச் செல்லத் துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் செயல்பட்ட காஷ்மீரிகளுக்குக் கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் காஷ்மீரிகள் தொடர்ந்து அவதூறு செய்யப்படுகிறார்கள். பல இந்துக்கள் ஆழ்மனதிலோ அல்லது மனமுவந்தோ நமது காஷ்மீரி சக குடிமக்களை, அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் மட்டுமே விசுவாசமற்றவர்களாகவும் நம்பத்தகாதவர்களாகவும் சித்தரிக்கும் ஒரு மனநிலையையே இவை காட்டுகின்றன.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நமது அரசுகள் அளித்துள்ள வாக்குறுதிகளை இப்போது நிறைவேற்றத் தொடங்க வேண்டும். மாநில அந்தஸ்தை அளிப்பது அவசியமான முதல் படியாகும். காஷ்மீரும் காஷ்மீரிகளும் இந்தியக் குடியரசின் ஒரு சரியான, கௌரவமான பகுதியாக உணருவதற்கு ஏற்ற செயல்பாடுகளை நாம் பெருமளவில் முன்னெடுக்க வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராமச்சந்திர குஹா, வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர்.