கேரட் சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகள் இருக்கா?

Published On:

| By Santhosh Raj Saravanan

benefits of eating carrots in winter tamil

கேரட் சாப்பிடுவது உடலுக்கும், சருமத்திற்கும் மிகுந்த நன்மையளிக்கும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

தற்போது நிலவும் குளிர்காலத்தில் கேரட் இயல்பாக சந்தைகளில் நமக்கு கிடைக்கும் உணவுப் பொருளாக மாறிவிட்டது. குளிர்காலம் முடிந்தாலும் கேரட் சந்தைகளில் கிடைக்கும் பொருளாகவே உள்ளது. கேரட்டை காய்கறியாக உணவில் சேர்த்து சாப்பிடலாம். சாலட்டுகள் செய்தோ, கேரட் ஜூஸாகவோ, ஊறுகாய் செய்தோ சாப்பிடலாம்.

ADVERTISEMENT

இன்னும் சொல்லப்போனால் சுவை மிகுந்த கேரட் அல்வா கூட செய்து சாப்பிடலாம். கேரட்டில் கொழுப்பு குறைவாக உள்ளது. அதே சமயம் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கே, நார்ச்சத்துகள், பொட்டாசியம், மங்கனீசு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கேரட் சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகளை விரிவாகக் காணலாம்.

கண்களுக்கு மிகவும் நல்லது: கேரட் சாப்பிடுவது கண்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கிறது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் போன்ற ஆக்சிஜனேற்றிகள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரி ரேடிக்கல்லில் இருந்து பாதுகாக்கின்றன. கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது.

ADVERTISEMENT

ரத்த அழுத்தம், இதய நோய் அபாயத்தை குறைக்கும்: ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ள கேரட் ரத்த அழுத்தப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது. ரத்த அழுத்தத்தை சரியான அளவில் பராமரிக்கவும், மாரடைப்பு அபாயத்தை குறைக்கவும் இவை உதவுகின்றன. கேரட் சாப்பிடுவதன் மூலம் ரத்த ஓட்டமும் மேம்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

வாய் ஆரோக்கியம்: கேரட் சாப்பிடுவது நமது வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. கேரட்டை தொடர்ந்து சாப்பிடுவது ஈறுகளை வலுப்படுத்தி பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கேரட் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது.

ADVERTISEMENT

சரும ஆரோக்கியம்: கேரட் சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் உள்ளன. அவை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன.

செரிமானத்திற்கு நல்லது: கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. அவை குடல் இயக்கத்தை எளிதாக்கி மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றன. மேலும், கேரட் செரிமான அமைப்பு சீராக செயல்பட உதவுகிறது.

கல்லீரலுக்கு நல்லது: கேரட் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. கல்லீரலில் கொழுப்பு மற்றும் பிளேக் படிவதைக் குறைக்கவும் அவை உதவுகின்றன. கேரட்டை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரலில் வீக்கம், தொற்று மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. இதேபோல கேரட் சாறு ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புரோஸ்டேட் சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

அதே சமயம் நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், பச்சையாக கேரட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கேரட்டை அதிக அளவில் உட்கொள்வது வாயு, வயிற்று வலி மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். ஆகவே, உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த கேரட்டை மிதமான அளவில் சாப்பிடுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share