ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்களை முதலில் தள்ளுபடி செய்யும் அதே நீதிபதி மீண்டும் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Bail and anticipatory bail petitions
திருட்டு வழக்கில் கைதான கோவையைச் சேர்ந்த பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தரமோகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, “இம்மனுவை ஏற்கனவே வேறு ஒரு நீதிபதி விசாரித்து தள்ளுபடி செய்திருக்கிறார். எனவே அதே நீதிபதி மனுவை விசாரிக்க வேண்டுமா? அல்லது தற்போது ஜாமீன் முன் ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதியே விசாரிக்கலாமா என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் பேரில் இந்த மனு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் அமர்வில் இன்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜரானார்.
அவர், “உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகள் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த அதே நீதிபதி தான் மீண்டும் தாக்கல் செய்யும் மனுக்களை விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் சேகர் பிரசாத் மோட்டோ வழக்கின் தீர்ப்பில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன மனுக்களை விசாரிக்க பிரத்தியேகமான அமர்வு இருக்கக்கூடிய உயர் நீதிமன்றங்களில் ஏற்கனவே தள்ளுபடி செய்த நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்றால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மதுரை கிளைக்கு மாற்றப்பட்டால் அந்த ஜாமீன் மனுவை மதுரைக்கு மாற்ற வேண்டும். அது வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் என்பதோடு வழக்கறிஞர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையிலும் ஜாமீன் முன் ஜாமீன் மனுக்களை விசாரிக்க பிரத்தியேகமாக நீதிபதி இருப்பதால் ஏற்கனவே தள்ளுபடி செய்த அதே நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பது இல்லை. பிரத்தியேக நீதிபதிவே விசாரிக்கலாம் ” என்று கூறினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலச்சந்திரனும் இதே கருத்தை முன் வைத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஜாமீன் முன் ஜாமீன் மனுக்களை விசாரிக்க பிரத்தியேக அமர்வு இருக்கும் பட்சத்தில் மற்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்த மனுக்களையும் பிரத்தியேக நீதிபதியே விசாரிக்கலாம்.
ஏற்கனவே மனுவை தள்ளுபடி செய்த நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்பதில்லை. மனுதாரர்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட விபரங்களை கட்டாயம் மனுவில் குறிப்பிட வேண்டும்.
அதேசமயம் பிரத்தியேகமாக விசாரிக்கும் நீதிபதி ஏற்கனவே தள்ளுபடி செய்த நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டுள்ள கருத்தை முறையாக பரிசீலித்து உரிய உத்தரவுகளை காலதாமதம் இன்றி பிறப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே தள்ளுபடி செய்து நிலுவையில் உள்ள புதிய மனுக்களை உடனடியாக பிரத்தியேக அமர்வு முன்பாக பட்டியலிட நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். Bail and anticipatory bail petitions