சிறப்புக் கட்டுரை: ‘கெட்ட வார்த்தை’ பேசுவதைத் தடுப்பது எப்படி?

Published On:

| By Balaji

அ. குமரேசன்

வெப்பம் நிறைந்த வாய்ச்சண்டை நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் எதிர்த்துப் பேசும் பெண்ணின் மீது அவளது நடத்தையை இழிவுபடுத்தும் வசவுச் சொற்களை வீசுகிறான் ஆண். அவனுடைய நோக்கம் நிறைவேறுகிறது. நியாயமான ஆத்திரத்தோடு அவளும் தரக்குறைவானவை எனப்படும் சொற்களை அவன்மீது வீசுகிறாள். இந்தப் பிரச்சினையில் பஞ்சாயத்துக்கு வந்தவர்கள், “ஒரு பொம்பளை இப்படி வரம்பு மீறிப் பேசலாமா, இதுதான் நம்ம பண்பாடா” என்றெல்லாம் கேட்டு அவளைக் கூனிக்குறுகி நிற்க வைத்துவிட்டுப் போனார்கள்.

வீட்டில், தெருவில், வயலில், அலுவலகத்தில் என எங்கும் இதைக் காணலாம். மக்கள் நேரலையாகப் பார்க்கும் தொலைக்காட்சி விவாதங்களில் இதேபோல் நடக்கிறது. அத்துமீறிப் பேசுவது ஆண்மையின் அடையாளமாகவும், வேறு வழியற்ற ஆவேசத்தில் எதிர்வினையாற்றுவது பெண்மைக்கு இழுக்கென்றும் பஞ்சாயத்தார்கள் தீர்ப்பளிக்கிறார்கள். ஆபாசமாகப் பேசுவதுதான் பெண்ணுரிமையா என்று அந்தத் தீர்ப்புகளில் கண்டிப்பாகக் கேட்கப்படும். ஆபாசமாகப் பேசுவதை ஆண் செய்தாலும் குற்றமே என்று சொல்ல மாட்டார்கள்.

ஆபாசச் சொற்கள், வசை மொழிகள், தரக்குறைவான பேச்சுகள் எனப்படுகிற “கெட்ட வார்த்தைகள்” பற்றி மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உளவியல், சமூகவியல், மொழியியல் எனப் பல கோணங்களில் ஆய்வறிக்கைகள் வந்துள்ளன. தமிழில் இது பற்றிய தனி நூல்கள் பெருமளவுக்கு வந்திருப்பதாகத் தெரியவில்லை. பெருமாள் முருகன் எழுதிய ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்ற நூல் ‘கலப்பை’ வெளியீட்டில் வந்திருக்கிறது. ‘கெட்ட வார்த்தைகளின் அரசியல்’ என்றொரு கட்டுரையைப் பொருளாதார எழுத்தாளர் நரேன் தனது ‘நரேனாமிக்ஸ்’ வலை பக்கத்தில் எழுதியிருக்கிறார். வேறு சிலரும்

இத்தகைய முயற்சிகளைச் செய்திருக்கக்கூடும்.

கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தத் தயங்காத சமூகத்தில்தான், அந்த வார்த்தைகள் பற்றிய ஆசூயையும் இருக்கிறது. குறிப்பிட்ட நூலிலும், கட்டுரைகளிலும் இடம்பெற்றுள்ள சொற்கள் பலருக்கு அதிர்ச்சியை அளிக்கக்கூடிய அளவுக்கு அசூயை உணர்வு வளர்க்கப்பட்டிருக்கிறது. மேல்தட்டுத்தனமான கண்ணோட்டத்துடன் கட்டப்பட்ட அந்த ஆசூயை உணர்வு இங்கே இதுபற்றிய ஆய்வுகள் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம் எனலாம். கடுமையான உடலுழைப்பு வாழ்க்கையை அடித்தட்டு மக்களுக்கென ஒதுக்கிய சாமர்த்தியமிகு சமூக அமைப்பில், அந்த வாழ்க்கையிலிருந்து உருவான சொற்களும் ஆசூயைக்கு உரியவையாக ஒதுக்கப்பட்டதில் வியப்பில்லைதான்.

ஓர் ஆண்டை தனது அடிமையைக் கையிலிருந்து வீசும் சவுக்காலும் வாயிலிருந்து வீசும் சொற்களாலும் தாக்கியதிலிருந்து இது தொடங்கியிருக்கிறது. முதலாளிகள் தங்கள் தொழிலாளிகளைத் திட்டுவது, அதிகாரிகள் தங்களுக்குக் கீழுள்ள பணியாளர்களைத் திட்டுவது என்று விரிந்து பரவியிருக்கிறது.

வார்த்தையில் ஏது நல்லது, கெட்டது?

இது பற்றி எழுதியிருப்பவர்கள் எல்லோருமே மொழியில் எப்படி நல்ல வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் என்றிருக்க முடியும் எனக் கேட்டிருக்கிறார்கள். உடலின் உறுப்புகளைக் குறிப்பிடுகிற பெயர்ச்சொற்கள் எப்படி கெட்ட வார்த்தைகளாகும்? எடுப்பான முகத் தோற்றத்துக்கு உதவுகிற முடி என்பதற்கான ‘மயிர்’ என்ற சொல் முதற்கொண்டு, இயற்கையான பாலியல் உறவுக்கும் இனப் பெருக்கத்துக்கும் தேவையான பிறப்புறுப்புகளைக் குறிப்பிடும் சொற்கள் வரையில் தமிழில் இருக்கின்றன. அந்த உறுப்புகள் கெட்டவையல்ல என்கிறபோது, அந்தப் பெயர்கள் எப்படிக் கெட்டவையாகும்? சேர்க்கை இன்பத்துக்கும் இனப் பெருக்கத்துக்குமான பாலியல் உறவு கெட்ட செயலல்ல என்கிறபோது, அதற்கான சொற்கள் எப்படிக் கெட்டவையாகும்?

(இது தனி ஆய்வரங்கம் அல்ல என்பதால் பொதுத்தளத்தில் அந்தச் சொற்களை நேரடியாகக் குறிப்பிடாமல்தான் பேச வேண்டியிருக்கிறது. மேலும், படிப்படியாக அந்த ஆசூயை களையப்பட வேண்டும் என்ற நோக்கமும் இருப்பதால், எடுத்த எடுப்பிலேயே ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்திப் பலரையும் இந்த உரையாடலிலிருந்து வெளியேற வைத்துவிடக் கூடாது என்ற அக்கறையோடும் அந்தச் சொற்கள் தவிர்க்கப்படுகின்றன.)

மக்களின் வாழ்வியலுக்கு இலக்கியம் ஒரு வரலாற்றுச் சாட்சியம். தமிழ் இலக்கியத்தில் உடலுறுப்புச் சொற்கள் இயல்பாக கையாளப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தில்தான் இலக்கியத்திலும் புகுந்துகொண்ட மேட்டிமைத்தனத்தால் அவை கெட்ட வார்த்தைகளாக ஓரங்கட்டப்பட்டு, நாசூக்குத்தனம் என்ற பெயரில் மாற்றுச் சொற்கள் கொண்டுவரப்பட்டன. ‘மயிர்’ நீப்பின் என்று வள்ளுவரால் சொல்ல முடிந்த நிலை மாறி, முடி, கேசம் என்று பூச்சுச் சொற்கள் புகுந்துகொண்டன. “போடா மயிரே” என்று கோபமாகவோ, செல்லமாகவோ சொல்வது போல யாரும் “போடா முடியே” என்று திட்டுவதில்லை. மற்ற சொற்களும் அப்படித்தான்.

ஆக, சொல்லில் நல்லது, கெட்டது இல்லை. சொல்கிற நோக்கத்தில்தான் இருக்கிறது. எதிராளியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறபோது அந்தச் சொல் கெட்டதாக மாறுகிறது. குறிப்பிட்ட சொற்கள் அந்த நோக்கத்துடன் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் அவை கெட்ட வார்த்தைகள் என்ற கூடையிலேயே போடப்பட்டுவிட்டன.

பெண்ணைத் தாக்க

எதிராளியை இழிவுபடுத்துகிற நோக்கம் என்று வருகிறபோது, முதலில் எதிரில் நிறுத்தப்படுவது பெண்தான். எதிர்ச்சொல் சொல்ல முடியாதவளாக நிறுத்திவைத்து, அந்தக் கெட்ட வார்த்தைக் கூடையில் கிடக்கிற பல சொற்களை எடுத்து அவளை நோக்கியே வீசுகிறது ஆணாதிக்கச் சமூகம். உடலுழைப்பாளிகளை அசூயையோடு அடித்தட்டுகளுக்குத் தள்ளிய சமூக அமைப்பின் கை ஓங்கத் தொடங்கியதோடு இணைந்ததே இவ்வாறு பெண்ணுக்கு எதிரான வசைச்சொற்களை ஒதுக்கிய ஆணாதிக்க ஆணவமும்.

ஆணைத் திட்டுகிறபோதுகூட, பெண்ணை அடையாளப்படுத்தும் சொற்களைக் கொட்டுகிற அளவுக்கு இது வக்கரித்துப் போயிருக்கிறது. “…….வுக்குப் பிறந்தவனே” என்பது உள்ளிட்ட வசவுகளால் அவனுடைய தாய் ஒழுக்கம் தவறியவளாகத் தாக்கப்படுகிறாள். பிறப்புறுப்பைச் சொல்லி அவனுடைய தமக்கை தாக்கப்படுகிறாள். இத்தகைய சொற்களால் ஆணை அவமானப்படுத்துவது மட்டுமல்ல, இத்தகைய சொற்களால் அவமானப்பட்டுவிட்டதாக ஆண் எடுத்துக்கொள்வதும் ஆணாதிக்க வக்கிரத்தின் வெளிப்பாடுகள்தான். வேடிக்கை என்னவென்றால், பெண்ணின் உறுப்பைச் சொல்லி “…… மகனே” என்று திட்டுகிறவர்கள் தாங்களும் அதிலிருந்து பிறந்த மகன்கள்தான் என்பதை மறந்துவிடுவதுதான்.

பெண்ணுக்கு எதிரான இப்படிப்பட்ட சொல்வீச்சுகள் பிற மொழிகளிலும் இருக்கின்றனவா? எந்த அளவுக்கு இருக்கின்றன? அல்லது தனியே தமக்கொரு குணம் வைத்திருக்கிற தமிழர்களிடம்தான் இந்த அளவுக்கு இருக்கின்றனவா? விசாரித்தறிய வேண்டும்.

கோபத்தில் மட்டுமல்ல

வாழும் சொற்களாக இருந்தவை எப்போது, எப்படி வசைச்சொற்களாகின என்ற ஆய்வு முடிவுகள் கிடைக்கும் வரையில், பொதுவாக எதிராளியின் மீதான சீற்றத்தின் வெளிப்பாடாகவே இது புறப்பட்டிருக்கும் என ஊகிக்கலாம். எதிராளியைத் தாழ்வாக மதிக்கிற ஆணவத்தின் வெளிப்பாடாகவும் புறப்பட்டிருக்கும் என்று கணிக்கலாம்.

ஆனால், வாயிலிருந்து கெட்ட வார்த்தை புறப்படுவது கோபத்திலோ, ஆணவத்திலோ மட்டுமல்ல. மனம் உற்சாக மிகுதியில் இருக்கும்போதும் இந்தச் சொற்கள் புறப்படுகின்றன. ஒரு நல்ல பேச்சைக் கேட்டுவிட்டால் “…… அருமையாப் பேசினான்டா” என்று சொல்வதையும், விளையாட்டில் ஒரு புதிய சாகசத்தைப் பார்த்துவிட்டால் “……. என்னம்மா ஆடினாங்க” என்று புளகாங்கிதம் அடைவதையும் பார்க்கவே செய்கிறோம். துயரத்திலோ, ஏமாற்றத்திலோ விழுகிறபோது கடவுளையேகூட இந்தச் சொற்களால் அர்ச்சிப்பவர்கள் உண்டு. உடல் நோவுற்றுக் கடுமையான வலியில் இருக்கிறபோது தன்னைத்தானே ஏசிக்கொள்கிற சொற்கள் ஓர் ஒத்தடம் போல செயல்படுகின்றன என்கிறார்கள் உளவியலாளர்கள். பல நேரங்களில் வகையற்றவர்களின் வயிற்றெரிச்சல் முனகலாகவும் இந்தச் சொற்கள் வருகின்றன.

ஏதோவொரு கொடுக்கல் வாங்கல் தகராறு அல்லது அவன் வீட்டுப் பெண்ணுக்கு இவள் வீட்டுப் பையன் காதல் கடிதம் கொடுத்தான் என்ற விவகாரம். அப்போது வீட்டு முன்பாக வந்து வன்முறையாலோ, வன்சொற்களாலோ குடும்பத்துக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டுத் திமிரோடு போகிறவனின் முதுகுப்புறமாகக் காட்டமும் கண்ணீருமாய் நின்றபடி மண்ணைவாரித் தூற்றுகிறவளிடமிருந்து வருகிற “காதால் கேட்க முடியாத சொற்கள்” வெறும் கெட்ட வார்த்தைகளாகிவிடுமா? சென்னையின் பேச்சுமொழி அடையாளங்களில் ஒன்றாகிய குறிப்பிட்ட வசவுச் சொல்லைப் பெண்களும் பயன்படுத்துகிறார்கள். துணைக்கு யாரும் வராத நிலையில் அவர்கள் அப்படிப் பேசுவதைப் பண்பற்றதாகச் சித்திரிக்கலாமா?

அறிவுரையாளர்கள் அறியாதது

குழந்தைகள் முன்னிலையில் இப்படிப்பட்ட சொற்களைப் பேசுவது அவர்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பெரியவர்கள் யோசிக்க வேண்டும் என்ற அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. கெட்ட வார்த்தை பற்றிய ஆசூயையிலிருந்துதான் அந்த அறிவுரைகள் வருகின்றன. வாழ்க்கை மாறாமல் வார்த்தை மாறிவிடுமா என்று அந்த அறிவுரையாளர்கள் யோசிப்பதில்லை.

கிராமங்களில், நகரங்களில், பல குடும்பங்களில், பல்வேறு மனநிலைகளில் இந்தச் சொற்கள் கையாளப்படுகின்றன. தெருவில் பக்கத்து வீட்டார்கள், எதிர்வீட்டார்கள் பேசுகிறார்கள். வேலை தருகிறவர்கள், விளையாடுமிடத்தில் மூத்தவர்கள், கட்டப் பஞ்சாயத்துகளில் பெரிய மனிதர்கள் இந்தச் சொற்களைப் போடுகிறார்கள். அங்கெல்லாம் வருகிற குழந்தைகளிடம் இந்தச் சொற்கள் தொற்றிக்கொள்கின்றன. குழந்தைப் பருவத்திலேயே தொற்றிக்கொள்வதால் அந்தச் சொற்களின் பொருள் என்ன, அவை ஏன் கோபத்தை ஏற்படுத்துகின்றன என்று தெரியாமலே வளர்கிறார்கள். அவர்களுக்கும் அத்தகைய கோபப் பொழுதோ, குதூகல நேரமோ அமைகிறபோது அவர்களும் அந்தச் சொற்களை வீசுகிறார்கள்.

வளர்ந்தவர்களோ, குழந்தைகளோ யாரானாலும், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கெட்ட வார்த்தை பேசலாமா என்று கேட்பது போலவே, ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களுடனான வாக்குவாதத்தில் இந்தச் சொற்களைப் பயன்படுத்துவதும் பெரும் சமூகக் குற்றமாக்கப்படுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான அவதூறுச் சொற்களைப் பயன்படுத்துவதும் ஒரு குற்றம் என்று சொல்லப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அவர்களை இப்படியெல்லாம் பேசி இழிவுபடுத்துகிற ஆதிக்கப்புத்தி தொடர்கிறது. அவர்களுடைய சாதிப் பெயரைச் சொல்லித் தாக்குவதேகூட ஒரு வசவாகக் கையாளப்படுவது இதோடு இணைந்ததுதான்.

இவ்வாறாக வர்க்க-சமூக-பாலினப் பாகுபாட்டு அடிவாரத்தின் மேல் வரலாற்றுக் கலவையோடு கட்டப்பட்டுள்ள சுவர்களில் ஒன்றாக இருக்கிறது வசவுச் சொல் பயன்பாடு. ஒழிக்கப்பட வேண்டியது கெட்ட வார்த்தைகள் அல்ல. நல்ல வார்த்தை – கெட்ட வார்த்தை என்ற பிரிவினையும் அசூயையும்தான். ஒழிக்கப்பட வேண்டியது தன்னைவிடத் தாழ்ந்தவர்களாகக் கருதுகிற ஆணவமும், அவர்களை எப்படி வேண்டுமானாலும் வையலாம் என்கிற அழுக்கும்தான்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share