தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர்களில் ஒருவராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டாலும் தாம் விரும்பிய பதவி இன்னமும் கிடைக்காததால் ரொம்பவே அவர் அதிருப்தியில்தான் இருக்கிறார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்தது முதலே மிக நீண்டகாலமாக தமக்கு ‘மிக’ முக்கியமான பதவி, பொறுப்பு கிடைக்கும் என காத்திருக்கிறார். இந்த நிலையில் தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் பாஜக மாநில துணைத் தலைவர்களாக 15 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நடிகை குஷ்புவும் ஒருவர். இந்த அறிவிப்பு வெளியான போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமக்கு இது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியிருந்தார். ஆனால் குஷ்புவால் 15 பேரில் ஒருவராக இருக்கக் கூடிய ஒரு பதவியை ஏற்க முடியவில்லை என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
இந்த நிலையில் சென்னையில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் நேற்று முகாமிட்டு ஆலோசனைகளை நடத்தினார். பாஜகவின் 14 மூத்த தலைவர்களைக் கொண்ட மையக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பிஎல் சந்தோஷ் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் புதிய நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் கேசவ விநாயகம், சசிகலா புஷ்பா உள்ளிட்ட 180 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் நடிகை குஷ்பு மட்டும் கலந்து கொள்ளவில்லை.
இது பற்றி பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, கோவாவில் ஷூட்டிங் நடைபெறுவதால் தம்மால் பயிற்சி முகாமுக்கு வர இயலாது என சொல்லிவிட்டுதான் குஷ்பு சென்றார். ஆனால் குஷ்புவுக்கு மாநில துணைத் தலைவர் பதவி மட்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி இல்லை என்பது உண்மைதான். குஷ்புவைப் பொறுத்தவரையில் மாநில அமைச்சர்களுக்கு இணையான மத்திய அரசின் போர்டுகளில் ஒன்றில் தலைவர் பதவியைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். போர்டு தலைவர்களுக்கு மத்திய அரசே வீடு, வாகன வசதி உள்ளிட்ட சலுகைகளை தரும்; மாநில அமைச்சர் ஒருவருக்கு இணையான அந்தஸ்து கொண்ட அரசு பதவியாக அது இருக்கும். அப்படியான ஒரு பதவியைத்தான் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்து கொண்டே இருக்கிறார் குஷ்பு. ஆனாலும் அவர் நினைத்தபடி எதுவும் நடக்கவே இல்லை. இதனால்தான் மாநில துணைத் தலைவர் பதவியை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் குஷ்பு என்கின்றன.