ADVERTISEMENT

வெனிசுலா எண்ணெய் வயல்களில் கால்வைக்க ஒரு கொல்லைப்புற அரசியல் –3

Published On:

| By Mathi

Venezuela

பகுதி 1 | பகுதி 2

அ. குமரேசன்

ADVERTISEMENT

சதாம், கடாபி வரிசையில் மதுரோ? உலக சமுதாயம் அனுமதிப்பதோ?

எண்ணெய் வளத்தைக் குறிவைத்துவிட்டால் அமெரிக்க அரசு எந்த அளவுக்குப் போகும் என்பதற்கு, 22 ஆண்டுகளுக்கு முன் இராக் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் சாட்சியமளிக்கிறது.

சதாம் உசேன்

இராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அதற்கு அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்ன காரணம்: “பேரழிவு ஆயுதங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.” அமெரிக்க அரசே அமைத்த ஆய்வுக்குழு இராக் முழுவதும், ரகசிய இடங்கள் உள்பட சோதனை செய்து அளித்த அறிக்கையில் அப்படிப்பட்ட ஆயுதம் எதுவும் கண்ணில் படவில்லை என்று தெரிவித்தது. இந்தத் தவறு எப்படி நடந்தது என்று பின்னர் அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்தி, உளவுத்துறை (சிஐஏ) அளித்த தகவல்கள் தவறானவை என்று அறிவித்தது. புஷ் ஒரு தனிக் குழுவை அமைத்தார், அதுவும் சிஐஏ முற்றிலும் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறியது.

இந்தப் பொய் அம்பலமானதால் சதாம் விடுவிக்கப்பட்டு விடவில்லை. புஷ் ஏற்பாட்டில் அமர்த்தப்பட்ட இடைக்கால அரசாங்கம் ஒரு சிறப்புத் தீர்ப்பாயத்தை அமைத்தது. அந்தத் தீர்ப்பாயம் 1982இல் துஜைல் என்ற கிராமத்தில் 148 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு அவரே காரணம் என்று தீர்ப்பளித்து தூக்குத் தண்டனை விதித்தது. அந்த விசாரணை ஒரு நாடகம் என்றுதான் உலக அளவில் விமர்சிக்க முடிந்ததே தவிர, 2006 டிசம்பர் 30 அன்று அவர் தூக்கில் கொலை செய்யப்பட்டதைத் தடுக்க முடியவில்லை.

கடாஃபி வதை

ஆப்பிரிக்க நாடுகளை டாலர் கட்டுப்பாட்டிலிருந்து மீட்பதற்காக “தங்க தினார்” என்ற, தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாணய மாற்று முறையை அறிமுகப்படுத்த முயன்றார் லிபியா அரசுத்தலைவர் முஅம்மர் கடாஃபி. அது முழுமையாக நடைமுறைக்கு வருமானால் ஆப்பிரிக்கா மீதான தங்களுடைய பிடி தகர்ந்துவிடும் என்று அமெரிக்க அரசும், வேறு சில மேற்கத்திய அரசுகளும் கலவரமடைந்தன. சோசலிசமும் தேசியவாதமும் இஸ்லாமிய கோட்பாடுகளும் கலந்த கொள்கைகளை வகுத்தவர், இலவசக் கல்வி, மருத்துவம், வீடு, பெண்களுக்கு ராணுவப் பயிற்சி எனச் செயல்படுத்தினார். பழங்குடி இனங்களிடையே மோதல்களையும், மேற்கத்திய ஊடுருவல்களையும் தடுக்க வேண்டிய கட்டாயத்தோடு, தேர்தல் வழி பிரதிநிதித்துவ ஜனநாயகம் ஒரு மோசடி என்ற கருத்தும் கொண்டிருந்தார். ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உருக்காக நின்றார்.

உள்நாட்டில் அவரை ஏற்க மறுத்தவர்கள் கிளர்ச்சிக் குழுக்களாக உருவெடுக்கவும், வன்முறைகளில் இறங்கவும் உதவினார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. 2011இல் கடாஃபி கடாபி தனது சொந்த ஊரான சிர்டே (Sirte) நகரில் ஒரு கார் அணிவகுப்பில் தப்பிக்க முயன்றபோது, அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ ராணுவக் கூட்டமைப்பு விமானங்கள் குண்டுகளை வீசின.. காயமடைந்த நிலையில் ஒரு கழிவுநீர்க் குழாய்க்குள் மறைந்திருந்தவரை கிளர்ச்சிக்குழுவினர் இழுத்து வந்து, கொடூரமான முறையில் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றனர். ஒபாமா உடனடியாகத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹில்லாரி கிளின்டன், “நாங்கள் வந்தோம், பார்த்தோம், செத்துக்கிடந்தார்,” என்று சிரித்தபடி பேட்டியளித்தார்.

திசையெங்கும் கண்டன அதிர்வுகள்

இதே போல் சிலி, குவாதமாலா நாடுகளின் இடதுசாரி அரசுகளை அமெரிக்க ஏகாதிபத்த்தியம் கவிழ்த்த சதிக் கதைகளும் இருக்கின்றன. அன்றைய கொடுமைகளின் இன்றைய பதிப்பாகவே வெனிசுலாவுக்குள் புகுந்து மதுரோ, புளோரஸ் இருவரும் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஐநா சபையின் ஒப்புதல் பெறாமல் ஒரு தன்னாளுமை நாட்டின் தலைவரைக் கைது செய்வது அனைத்து நாட்டுச் சட்டங்களுக்கு எதிரானது என பல அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

“எந்தவொரு நாடும் தன்னை உலகப் போலீஸ் என்பதாக நினைத்துக்கொண்டு செயல்படக்கூடாது,” என்று சீன அரசு கடுமையாகக் கூறியுள்ளது. “இது அரச பயங்கரவாதம்” என்று கியூபா சாடியுள்ளது. “அனைத்துநாட்டுச் சட்டமீறலின் உச்சம்,” என்று ரஷ்யா விமர்சித்துள்ளது. பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா, சிலி மற்றும் உருகுவே ஆகிய வெனிசுலாவின் அண்டை நாடுகளின் அரசுகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், “அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கையை நிராகரிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளன. இதை ஒரு “கடத்தல் நடவடிக்கை” என்று சித்தரித்துள்ள ஹோண்டுராஸ் அரசு வெனிசுலாவின் எல்லை ஒருமைப்பாட்டை அமெரிக்கா மீறிவிட்டதெனக் கண்டனம் தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், “அமெரிக்க நடவடிக்கை ஒரு ஆபத்தான முன்னுதாரணம்” என்று ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளும் தங்களின் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தி, அனைத்து நாட்டுச் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

“கவலைக்குரிய” அறிக்கை

இந்நிலையில், இந்திய மக்களின் கவலைக்குரிய வகையில், வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு கவலை மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், வெனிசுலாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துவந்த கச்சா எண்ணெய்யில் கிட்டத்தட்ட 80 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் டிரம்ப் நடவடிக்கையை உரத்த மொழியில் கண்டிக்க மறுப்பது என்ன விதமான சமரசம்? தேநீர்க்கடை உரையாடல்களில் கூட, “என்னப்பா இது ஒரு நாட்டுக்குள்ள இவ்வளவு பகிரங்கமா போய் ஜனாதிபதியையே அரெஸ்ட் பண்ணிக் கொண்டுபோறாங்க,” என்று தங்கள் தங்கள் மொழிகளில் பேசுகிற மக்களின் மனசாட்சியை காட்டிக்கொடுக்கிற சமரசம்.
சொல்லப்போனால், உலகளாவிய தெற்கு நாடுகளின் இணையவழி மாநாடுகளை இரண்டு முறை நடத்தியும், ஜி–20 அமைப்பில் ஆப்பிரிக்க நாடுகளை இணைத்தும், கொரோனா காலத்தில் பல ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி மருந்துகளை அனுப்பியும், அந்த நாடுகளின் குரலாகத் தன்னை முன்னிறுத்த முயன்று வந்திருக்கிறது இந்தியா. அந்த மாநாடுகளில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் முன்னுரிமைதான் இந்தியாவின் முன்னுரிமை” என்றே அறிவித்தார். இந்த நிலையில் வெனிசுலா உரிமை நசுக்கப்படுவதைக் கண்டு கவலை மட்டும் தெரிவிப்பது அந்தக் குரலை வெறும் கீச்சொலியாக மாற்றுகிறது.
அதுவும், எவ்வளவுதான் பணிந்து நடந்துகொண்டாலும் டிரம்ப் தனது வன்மப் போக்கை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரையில் வரி விதிக்கும் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். இப்போதாவது கீச்சொலி உரத்த குரலாக ஒலிக்க வேண்டாமா?

எல்லோருக்குமான எச்சரிக்கை

அமெரிக்காவின் நடவடிக்கை ஒரு வெனிசுலாவுக்கு எதிரானது மட்டுமல்ல, அந்நாட்டு எண்ணெய்க்கிணறுகளில் பெரும் முதலீடுகள் செய்துள்ள சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரானதுமாகும். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள உலகளாவிய செல்வாக்கை முடக்கும் ஒரு புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டடத்தின் காய் நகர்த்தலும் இதில் இணைந்திருக்கிறது. “என்னை மகிழ்ச்சியாக வைத்திருங்கள், இல்லாவிட்டால்…” என்று டிரம்ப் இப்போது கூடப் பேசியிருப்பதில், நாளை வேறு எந்தவொரு வளரும் நாட்டிற்கு உள்ளேயும் இப்படி ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கி ஊடுருவப்படும், சதாம், கடாஃபி கதி ஏற்படும் என்ற அடாவடி அச்சுறுத்தல் இருக்கிறது.

ஒரு நாட்டின் ஜனநாயகத்தை மீட்டு அந்த மக்களிடமே ஒப்படைப்பதில் என்ன தவறு என்பதாக, டிரம்ப் நடவடிக்கையை ஆதரிக்கிற சிலர் கேட்கிறார்கள். அனைத்து நாடுகளுக்குமான சட்டங்களைப் புறக்கணித்து ஒரு நாட்டின் அரசுத் தலைவரைக் கடத்துவதுதான் ஜனநாயகத்தை மீட்கிற வேலையா? டிரம்ப்பின் உண்மை நோக்கம் என்னவென்று அப்பட்டமாகத் தெரியவந்துவிட்ட நிலையிலும் இப்படிக் கேட்பதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது. வெனிசுலாவின் ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியது, சாவேஸ்சையும் மதுரோவையும் தேர்ந்தெடுத்த மக்கள்தான். வெள்ளை மாளிகை அல்ல.

நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இப்போது விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. மதுரோ, புளோரஸ் இருவருக்காகவும் அமெரிக்க வழக்குரைஞர்கள்தான் வாதாடுகிறார்கள். வெனிசுலா வழக்குரைஞர்களின் உதவியோடு அவர்கள் டிரம்ப் நடவடிக்கையின் அரசியல், பொருளாதார உள்நோக்கங்களைச் சுட்டிக்காட்டி சிறப்பாகவே வாதிட்டு வருகிறார்கள். பொதுவாக, தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து, போதைப்பொருள் பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டுகளோடு ஒரு வழக்கு வருமானால், அமெரிக்க நீதிமன்றங்கள் அடுத்த பக்கத்தைப் புரட்டிக் கூடப் பார்க்காமல் அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பளிப்பது வழக்கம். அரிதாக, அரசின் நடவடிக்கை தவறு என்று கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட காட்சிகளும் உண்டு.

சர்வதேச நீதிமன்றம் (ஐஜேசி), சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) ஆகியவற்றுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்றாலும், ஒரு நாட்டின் அரசுத் தலைவரைக் கடத்திச் செல்வது குற்றம் என்று சர்வதேசச் சட்டத்தின் கீழ் அங்கே வாதிடப்படும் என்றாலும், அதைத் தவிர்ப்பதற்காகத்தான் மதுரோவை சட்டப்பூர்வ அரசுத் தலைவராக டிரம்ப் அரசு அங்கீகரிக்கவில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆயினும், உலக மனசாட்சியை அந்த வாதங்கள் உசுப்பிவிடக்கூடும். ஆகவே தான் தற்போதைய விசாரணையையும் வைக்கப்படும் வாதங்களையும் வரப்போகும் ஆணைகளையும் உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

(நிறைவு)

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share