இந்தி திரையுலகில் புகழ் பெற்ற நடன வடிவமைப்பாளராகத் திகழ்பவர் ஃபாரா கான். ஓம் சாந்தி ஓம் போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் இவர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக, தான் நடத்திவரும் யூடியூப் சேனலுக்காகப் பிரபலங்களின் வீட்டு சமையலறைகளையும் அவர்களது சமையலையும் படம்பிடிக்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
‘நாம் ரசித்த பிரபலங்களின் வீடுகள், பங்களாக்கள் இவ்வளவு ஆடம்பரமாக இருக்குமா’, ‘அவங்க கிச்சன்ல இவ்ளோ வசதிகள் இருக்குதா’, ‘இப்படியெல்லாம் உணவு சாப்பிட்டா, இவ்வளவு ஆரோக்கியம் கிடைக்குமா’ என்பது போன்ற பல ஆச்சர்யங்களைத் தனது நிகழ்ச்சி வழியாகத் தந்து வருகிறார் ஃபாரா கான். அவரது வீட்டில் பணியாற்றிய திலீப்பும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். இந்நிகழ்ச்சியை அவருக்காக ரசிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசம். அந்தளவுக்கு அவரது ‘கமெண்ட்கள்’ பிரபலம்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் ஹரித்வாரில் இருக்கும் ‘பதஞ்சலி நிறுவனம்’ புகழ் பாபா ராம்தேவை, அவரது ஆசிரமத்தில் சந்தித்தனர்.
அந்த ஆசிரமத்தின் உட்பகுதி, உணவுக்கூடம், பக்தர்கள் தங்கும் அறை, பாபா ராம்தேவ் தனியாக வசிக்கும் வீடு என்று பலவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் இந்த வீடியோவில், ரசிகர்களுக்காகத் தான் பரிந்துரைக்கிற உணவொன்றையும் பாபா ராம்தேவ் சமைக்கிற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் இடையே, ‘இங்க வர்ற பக்தர்கள் தங்குற இடம் அரண்மனை மாதிரி இருந்தாலும், நான் தங்குற வீடு ரொம்பச் சின்னதுதான்’ என்கிறார் பாபா ராம்தேவ். உடனே, ‘சல்மான் கானும் உங்களை மாதிரிதான். அவரோட வேலை பார்க்குறவங்களுக்கு பெரிய பெரிய மாளிகைகள் கட்டிக் கொடுத்துட்டு, அவர் 1 பிஹெச்கே வீட்டுல வாழ்ந்துட்டு வர்றார்’ என்று பதில் சொல்கிறார் ஃபாரா கான். அதைக் கேட்டு, வாய் விட்டுச் சிரிக்கிறார் பாபா ராம்தேவ்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் ‘வைரல்’ ஆகி வருகிறது.