பி12 குறைபாடு : பெண்கள் புறக்கணிக்கக் கூடாத முக்கிய அறிகுறிகள்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

B12 deficiency symptoms for women

வைட்டமின் பி12 (Vitamin B12 )என்பது நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாக உள்ளது. இது ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கம், நரம்பு மண்டல செயல்பாடு உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. பி12 அளவு குறையும்போது உடல் ஆரோக்கியமான ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய போராடுகிறது. இந்த குறைபாடு காரணமாக மெகாலோபிளாஸ்டிக் அனீமியா ஏற்படுகிறது. மேலும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. 

பி12 குறைபாட்டின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் : சோர்வு என்பது பி12 குறைபாட்டின் ஆரம்பகட்ட மற்றும் மிகவும் பொதுவான அறிகுறியாக உள்ளது. பெண்களுக்கு தலைசுற்றல் (Dizziness), மூச்சுத் திணறல், கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, நடுக்கம், சமநிலை பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அத்துடன் நினைவாற்றல் குறைபாடுகள், மனநிலை ஏற்ற இறக்கங்களும் இருக்கக்கூடும். இதற்குப் பிறகு வேகமான இதயத் துடிப்பு (palpitation) என்பது படிப்படியாக வரத் தொடங்கும். எனினும் பெண்கள் இவற்றை வழக்கமான வரும் பிரச்சனைதான் என்று கடந்து சென்றுவிடுகிறார்கள்.

ADVERTISEMENT

முடி உதிர்தல் பிரச்சனை : முடியின் ஆரோக்கியம் என்பது உட்டச்சத்துக்களுடன் தொடர்புடையதே. முடிகள் வலுவாக இருக்க ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. பி12 அளவுகள் குறையும்போது உச்சந்தலைக்கு ஆக்சிஜன் விநியோகம் குறைவதால் முடி வளர்ச்சியை அது பாதிக்கிறது. இது முடி உதிர்வு (Hair loss) என்னும் நிலைக்கு தள்ளுகிறது. குறிப்பாக பெண்களுக்கு முடி மெலிதல் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.

யாருக்கெல்லாம் பி12 குறைபாடு ஏற்படலாம் : சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்கள், அதிக மாதவிடாய் சுழற்சி(Menstrual cycle), கர்ப்ப காலங்கள், பிசிஓஎஸ், அமிலத்தன்மை போன்ற செரிமானப் பிரச்சனை உள்ள பெண்களுக்கு பி12 குறைபாடு ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

ADVERTISEMENT

பெண்களை ஏன் பி12 குறைபாடுபாதிக்கிறது : மாதவிடாய், கர்ப்பம், தாய்ப்பால் கொடுப்பது ஆகியவை ஊட்டச்சத்துக்களின் தேவைகளை அதிகரிக்கிறது. ஆனால், சைவ உணவு, குறைவாக புரதம் உள்ள உணவுகளில் போதுமான இயற்கை பி12 ஆதாரங்கள் இல்லாமல் இருக்கலாம். இதனால் பி12 குறைபாடு (B12 deficiency) ஏற்படுகிறது. ஏனெனில் இறைச்சிகள் மூலமாகவே பெரும்பாலான பி12 சத்துக்கள் கிடைக்கின்றன.

ADVERTISEMENT

எப்படி கண்டறிவது மற்றும் சிகிச்சைமுறை : பி 12 குறைப்பாட்டை கண்டறிவது மிகவும் எளிதானது. ஒரு எளிமையான ரத்த பரிசோதனை (Blood test) மூலம் பி12 அளவை கண்டுபிடித்துவிடலாம். வாய்வழி சப்ளிமெண்ட், செறிவூட்டப்பட்ட உணவுகள், உணவுமுறையை சரிசெய்தல், ஊசி செலுத்துதல் மூலம் பி12 அளவை சரிசெய்யலாம். ஆகவே, சாதாரண பிரச்சனை என பி12 குறைபாட்டு அறிகுறிகளை புறக்கணித்துவிடாமல் அதற்கு உரிய கவனம் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share