திருநெல்வேலி மாவட்டத்தில் ரேபிஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய வயது 31. கொத்தனார் வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அப்போது நெரு நாய் ஒன்று ஐயப்பனை கடித்துள்ளது. ஆனால் உடனடியாக உரிய சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
இந்தசூழலில் இரு தினங்களுக்கு முன் உடல் நலக் குறைவு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஐயப்பனுக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலை நேற்று மோசமடைந்தது. தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 12) ஐயப்பன் உயிரிழந்தார்.
தெரு நாய் கடி மற்றும் ரேபிஸ் நோயால் தமிழகத்தில் கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரையிலான 18 மாதங்களில் மட்டும் சுமார் 65 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு 43 பேரும், இந்த ஆண்டு 22 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்போது நெல்லையில் இரு இளைஞர் உயிரிழந்திருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
நாய் கடித்தவுடன் காயம் பட்ட இடத்தை சோப்பு பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக 5 டோஸ்கள் வரை பரிந்துரைக்கப்படுகின்றன. அதன்படி அனைத்து தவணைகளையும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசியை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வது மட்டுமே உயிரிழப்பைத் தடுக்க ஒரே வழி.
ரேபிஸ் என்பது அறிகுறிகள் தோன்றிய பிறகு குணப்படுத்த முடியாத ஒரு கொடிய நோய் என சுகாதாரத் துறை எச்சரிக்கிறது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றமும் நெரு நாய்கள் வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நெருவில் சுற்றும் நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
