கரூர் சோகம் இன்னும் நீங்காத நிலையில், பனையூர் தவெக அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயரம் மக்கள் மனதில் நீங்கா வடுவாக உள்ளது. கரூரில் குழந்தைகள், உறவினர்களை இழந்து மக்கள் தவிக்கின்றனர்.
கரூர் பெருந்துயரம் அரசியல் அரங்கில் விவாத பொருளாக மாறி பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அந்தவகையில் பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகத்திலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.
குறிப்பாக விஜய் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு மாலை, வாழைக்கன்று கட்டி பூஜை செய்துள்ளனர்.
இதுதொடர்பான புகைப்பட்ம இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே 41 உயிரிழப்புகளுக்கு விஜய் மன்னிப்பு கேட்கவில்லை, கரூருக்கு போகவில்லை என்றாலும் அவரது அலுவலகத்திலேயே 41 பேரின் புகைப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தியிருக்காலம், பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கலாம் என கருத்துகள் சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த புகைப்படம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நெட்டிசன்கள் இதெல்லாம் நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதோடு இன்று காமராஜர் நினைவு தினம். காமராஜர் தவெக கொள்கை தலைவர்களில் ஒருவர் ஆவார். அவருக்கு இதுவரை மரியாதை செலுத்தாத விஜய் ஆயுத பூஜை மட்டும் கொண்டாடியுள்ளார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.