பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழர் வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும்.
அந்தவகையில் இன்று (ஜனவரி 15) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டியின் தொடக்கத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயா, காவல் ஆணையர் லோகநாதன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான காலைகள் போட்டியில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளைகளின் திமில் பிடித்து அடக்கி வருகின்றனர்.
இதுவரை 5 சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. மொத்தம் 464 காளை அவிழ்த்துவிடப்பட்டன. இவற்றில் 109 மாடுகள் மட்டும் பிடிபட்டன. இதில் 16 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இம்முறை மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை காளைகள் அடக்கினர் என்ற விவரம் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக, அய்யனார்குளத்தை சேர்ந்த விஜயகுமார் 5 காளைகளையும், குன்னத்தூரைச் சேர்ந்த அரவிந்த், – 4 காளைகளையும், கருப்பாயூரணியைச் சேர்ந்த பொன்பாண்டி, – 4 , கருப்பாயூரணியைச் சேர்ந்த அருண்பாண்டி, – 2 காளைகளையும் பிடித்துள்ளனர்.
அதேசமயம், 32 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 17 பேர் மாடுபிடி வீரர்கள், 14 பேர் மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் ஒருவர் ஆவர். இவர்களில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டியின் முடிவில் அதிக காளைகளைப் பிடிக்கும் சிறந்த வீரருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல், வீரர்களிடம் பிடிபடாமல் நீண்ட நேரம் களத்தில் கெத்து காட்டும் சிறந்த காளைக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது
அவனியாபுரத்தைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் பாலமேட்டில் ஜனவரி 16 அன்றும், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜனவரி 17 அன்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
