திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்கு ஜூலை 6-ந் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜூலை 4-ந் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. Tiruchendur Kumbhabhishekam Special Train
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில், அறுபடை வீடுகளில் 2-வது வீடாக போற்றப்படுகிறது. இத்திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா, ஜூலை 7-ந் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்
முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஏற்கனவே திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில், ஜூலை 7-ந் தேதி காலை 9.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு காலை 10.50 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து முற்பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு பகல் 12.55 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.
திருநெல்வேலி- திருச்செந்தூர் சிறப்பு ரயில், பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் குரும்பூர், ஆறுமுகநேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னையில் இருந்து சிறப்பு ரயில்– ஜூலை 4-ல் முன்பதிவு
இதனைத் தொடர்ந்து தற்போது திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06089/ 06090) அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜூலை 6-ந் தேதி இரவு 9.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கோட்டைக்கு ஜூலை 7-ந் தேதி முற்பகல் 11.30 மணிக்கு சென்றடையும். திருநெல்வேலிக்கு காலை 9.25 மணிக்கு இந்த ரயில் சென்றடையும்.
செங்கோட்டையில் இருந்து ஜூலை 7-ந் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் ஜூலை 8-ந் தேதி காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜூலை 4-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.