காரைக்குடி தமிழ் கல்லூரியில் அலுவலக உதவியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Attack on Karaikudi Tamil College office assistant
காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் முத்துமாரி.

கடந்த ஜூன் 20ஆம் தேதி கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே, இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது முத்துமாரி காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் காரைக்குடி வட்டக்கிளை சார்பில் காரைக்குடி அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைசெயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கடந்த 24ஆம் தேதி கடிதம் எழுதியது.
அதில், “காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி அலுவலக உதவியாளர் முத்துமாரி தாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தும், குற்றவாளி மீது முதல் தகவல் அறிக்கையோ, சமுதாய சேவை பதிவேடு எண்ணோ வழங்கப்படவில்லை.

அதோடு அழகப்பாபுரம் காவல்துறை சார்பு காவல் ஆய்வாளர் வெண்ணிலா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்துமாரியை சந்தித்து புகார் மனுவை மாற்றி எழுத கொடுக்கவும், உடனடியாக டிஸ்டார்ஜாக வேண்டும் என்றும் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
கடந்த 22 ஆம் தேதி இரவு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முத்துமாரியிடம் அலைபேசியை பறித்து தாக்குதல் குறித்த ஆதாரங்களை அழிக்க முயன்றிருக்கிறார்.
இந்த நடவடிக்கைகளை கண்டித்து சிவகங்கை மாவட்ட அமைப்பின் சார்பாக, காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு கடந்த 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் கடிதம் வழங்கப்பட்டது.
ஆனால் குற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, எங்கள் போராட்டத்திற்கும் அனுமதி வழங்கவில்லை, பாதிக்கப்பட்ட நபரையும் மிரட்டுகின்றனர்.
காரைக்குடி ராமசாமி கல்லூரியின் முதல்வர் நாகநாதன் பாதிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் முத்துமாரியிடம், கணவரை இழந்தவர் என்பதை அறிந்து பாலியல் ரீதியாக அணுக முயற்சித்துள்ளார்.
இது பற்றி ஏற்கனவே முத்துமாரி கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளரிடம் புகார் அளித்தும் கல்லூரி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட கல்லூரி முதல்வர் நாகநாதன், பெண்கள் பயன்படுத்தும் கழிவறையை பூட்டி வைத்துக் கொண்டு முத்துமாரி இனி இந்த கழிவறையை பயன்படுத்தக் கூடாது என்றும், கழிவறைக்கு வெளியே தான் அமர வேண்டும் என்றும் கடுமையான நெருக்கடிகளை கொடுத்துள்ளார்.
அதோடு கடந்த இரண்டு மாதங்களாக சாதி ரீதியாக பேசுவதும் நடத்துவதுமாக துன்புறுத்தி வந்துள்ளார்.
கணவனை இழந்து இரண்டு குழந்தைகளை பாதுகாப்பதற்காக உயிரே கையில் பிடித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் முத்துமாரியை பாதுகாக்கும் வகையிலும் , நியாயம் பெற்று தரும் வகையிலும் கல்லூரியின் தற்காலிக காவலர் பழனியப்பன் மற்றும் நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கும் பொறுப்பு கல்லூரி முதல்வர் நாகநாதன், அழகப்பாபுரம் காவல்துறை சார்பு ஆய்வாளர் வெண்ணிலா உள்ளிட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் முத்துமாரி தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று (ஜூன் 26) தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக காரைக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், முத்துமாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் கல்லூரி முதல்வர் நாகநாதன் மற்றும் காவலர் பழனியப்பனை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். Attack on Karaikudi Tamil College office assistant