“ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும், அதுவும் உயர் அதிகாரியாக கெத்து காட்ட வேண்டும்” என்று கனவு காணும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி. இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘மினி ரத்னா’ நிறுவனமான ரைட்ஸ் லிமிடெட் (RITES Ltd), பிரம்மாண்டமான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியாகும் நிலையில், இம்முறை மொத்தமாக 429 பணியிடங்களை நிரப்ப ரைட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எந்தத் துறையில் வாய்ப்பு?
பொறியியல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உதவி மேலாளர் (Assistant Manager) மற்றும் இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- சிவில் இன்ஜினியரிங் (Civil): அதிகபட்சமாக 206 இடங்கள்.
- மெக்கானிக்கல் (Mechanical): 60 இடங்கள்.
- எலக்ட்ரிக்கல் (Electrical): 36 இடங்கள்.
- சிக்னல் & டெலிகாம் (S&T): 28 இடங்கள்.
இதுதவிர, தகவல் தொழில்நுட்பம் (IT), சுற்றுச்சூழல் மற்றும் கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி என்ன?
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) முடித்திருக்க வேண்டும்.
- கேட் (GATE) மதிப்பெண்: உதவி மேலாளர் மற்றும் இன்ஜினியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, 2024 அல்லது 2025ஆம் ஆண்டுக்கான கேட் (GATE) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். கேட் மதிப்பெண் அடிப்படையில் தான் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
வயது வரம்பு:
- உதவி மேலாளர் பணிக்கு: 35 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
- இன்ஜினியர் பணிக்கு: 30 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).
சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசுப் பணிக்கு இணையான சம்பளம் இதில் கிடைக்கும்.
- உதவி மேலாளர் (E-1): ஆண்டுக்கு சுமார் ரூ.14 லட்சம் வரை (CTC) சம்பளம் கிடைக்கும். அடிப்படை ஊதியம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை.
- இன்ஜினியர்: நல்ல ஊதியத்துடன் கூடிய ஒப்பந்த காலப் பணி இது.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் கேட் மதிப்பெண் (GATE Score) மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு எதுவும் தனியாகக் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ளவர்கள் www.rites.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- பொதுப் பிரிவினருக்குக் கட்டணம்: ரூ.600
- எஸ்.சி/எஸ்.டி/பெண்கள்: ரூ.300
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
31.12.2025 (மாலை 5 மணிக்குள்). கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் வைத்திருப்பவர்கள், வேறு எதையும் யோசிக்காமல் உடனே விண்ணப்பியுங்கள். ரயில்வேத் துறையில் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது!
