ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “விளையாட்டிலும் Operation Sindoor.. இந்தியா வென்றது” என பெருமிதம் பொங்க பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 போட்டிகளில் இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக மோதியதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி வீரர்கள் நிதானமான ரன்களைக் குவித்தனர்.
19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 150 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9-வது முறையாக இந்திய அணி வாகை சூடி வரலாறு படைத்தது. இந்திய அணி இதற்கு முன்னர் 1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திரடி, விளையாட்டிலும் “Operation Sindoor.. அதே முடிவுதான்.. இந்தியாவுக்கு வெற்றி- நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பெருமிதம் பொங்க பதிவிட்டுள்ளார்.