ஆசிய கோப்பை தொடரில் ஓமனை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி.
ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று இரவு அபுதாபியில் நடைபெற்றது. இதில் ஓமன் அணியை எதிர்கொண்ட இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஓமன் அணி சிறப்பாக ஆடிய போதும் 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஓமன் அணியின் விநாயக் சுக்லா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டியில் முதல் நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என சாதனை படைத்தார் அர்ஷ்தீப் சிங்.
அதோடு உலகளவில் குறைந்த போட்டிகளில் (64) இந்த சாதனையை படைத்த 3வது வீரர் என்ற பெருமையும் அர்ஷ்தீப் பெற்றார்.
ஓமனை வீழ்த்தியதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியுடன் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் சூப்பர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதே போன்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி சூப்பர் ஃபோர் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இதனையடுத்து ஆசியக் கோப்பையில் நாளை துபாயில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை மீண்டும் சந்திக்க உள்ளது.
ஏற்கெனவே கடந்த வாரம் நடந்த லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி. அதோடு இந்திய அணி கேப்டன் சஞ்சு சாம்சன் உட்பட வீரர்கள் யாரும் பாகிஸ்தான் அணியினருடன் கைக்குலுக்காதது சர்வதேச அளவில் சர்ச்சையாக உருவெடுத்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் இரண்டு தனித்தனி புகார்களை அளித்த போதும் இரண்டுமே நிராகரிக்கப்பட்டன. பின்னர், நடுவர் ஆண்டி பைக்கிராஃப்ட் கைகுலுக்க மறுத்ததற்காக பாகிஸ்தான் அணியின் மேலாளர் மற்றும் கேப்டனிடம் மன்னிப்பு கேட்ட பிறகுதான் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசூர பலம் கொண்டதாக உள்ள இந்தியாவை வீழ்த்துவது என்பது பாகிஸ்தானுக்கு எளிதான விஷயம் அல்ல.
அதே வேளையில் லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கும், அவமானத்திற்கும் பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது. அதனால் இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துக்கட்டி போராடும் என்பதை உறுதியாக நம்பலாம்.