சோதனைக் காலத்தில் எப்போதும் துணையாக நிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி என டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று விடுதலை செய்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ தரப்பில் எவ்விதமான வலுவான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டு அனைவரையும் விடுவித்தது.
உணர்ச்சிவசப்பட்ட கெஜ்ரிவால்
தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், கண்ணீர் விட்டு அழுதார். அவரை மணீஷ் சிசோடியா கட்டி அணைத்து ஆறுதல் படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “எனக்கு எதிரான இந்த வழக்கு, சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. ஆம் ஆத்மி கட்சியை ஒழிப்பதற்காக பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தீட்டிய சதித்திட்டம் இது. கட்சியின் முக்கிய ஐந்து தலைவர்களைச் சிறையில் அடைத்தார்கள்.
பதவியில் இருந்த ஒரு முதல்வரை வீட்டிலிருந்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்தார்கள். செய்தி சேனல்கள் அனைத்தும் எங்களை ஊழல்வாதிகள் எனச் சித்தரித்தன.
ஆனால், இன்று கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி கட்சியும் நேர்மையானவர்கள் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது. உண்மை மீண்டும் வென்றுள்ளது.” என்று தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலின் கண்டனம்
இந்தத் தீர்ப்பு குறித்துத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பதிவில், “மத்திய பாஜக அரசு தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் சிறிதேனும் வெட்கப்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக உண்மை வெளிப்படும் வரை, அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவிற்கு எனது பாராட்டுகள்.” என தெரிவித்திருந்தார்.
கெஜ்ரிவால் நன்றி
தமிழக முதல்வரின் ஆதரவிற்குப் பதிலளிக்கும் விதமாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பதிவில், “எங்களது சோதனைக் காலத்தில் எப்போதும் துணையாக நிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மணீஷ் சிசோடியாவும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் , உங்கள் வலுவான ஆதரவுக்கும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கும் மிக்க நன்றி. உண்மை சோதிக்கப்பட்டலாம். ஒரு போது தோற்கடிக்க முடியாது. நமது ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் தொடர்ந்து பாதுகாப்போம். எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
