பரிதாபமா இருக்கு.. ஊழல் தடுப்புச் சட்டம் என்றால் எடப்பாடிக்கு தெரியுமா? – அருண்ராஜ் கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

எடப்பாடி பழனிசாமி அரசு பதவியில் இருந்ததே கிடையாது. எதை வைத்து அவர் ஊழல் என்று சொல்கிறார்? ஊழல் தடுப்புச் சட்டம் என்றால் அவருக்கு தெரியுமா? முதலமைச்சராக இருந்திருக்கிறார். ரொம்ப பரிதாபமாக இருக்கிறது என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த பலர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, புலி படத்தில் வாங்கிய சம்பளத்தை மறைத்ததற்கு வருமான வரித்துறை அபராதம் விதித்தது சரியானது என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி “விஜய் ஊழல் செய்துள்ளதாக நீதிமன்றமே நிரூபித்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் கட்சி தொடங்கிய பிறகு சில மாதங்களுக்கு முன்பாக எதிர்பாராத துயர சம்பவம் நடந்தது. அதன் பின்னர் 75 நாட்கள் விஜய் வீட்டை விட்டே வெளியே வரவில்லை; அலுவலகத்தையும் மூடிவிட்டனர். “இப்படி ஒரு கட்சி இருக்கிறதா?” என்று விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், திருச்சியில் இன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “நான் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. அவர் ஒரு முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஊழல் என்றால் என்ன என்பது முதலில் தெரிய வேண்டும்? இதுவரை அவர் ஒரு அரசு பதவியில் இருந்ததே கிடையாது. எதை வைத்து அவர் ஊழல் என்று சொல்கிறார்? ஊழல் தடுப்புச் சட்டம் என்றால் அவருக்கு தெரியுமா? முதலமைச்சராக இருந்திருக்கிறார். ரொம்ப பரிதாபமாக இருக்கிறது” என்றார்.

விஜயின் வரி ஏய்ப்பு குறித்த கேள்விக்கு, “வரி ஏய்ப்பு என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல கூடாது. காலம் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து சட்ட விதியின் படி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்வது குறித்தும் நீதிபதி தெரிவித்துள்ளார். அதற்கான முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

கூட்டணி குறித்த கேள்விக்கு, “கூட்டணியை நம்பி தலைவர் கட்சியை ஆரம்பிக்கவில்லை. கடைசியாக நடந்த கூட்டத்தில் சொன்னது போல், நட்புச் சக்திகள் வந்தாலும் வராவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்கக்கூடிய வல்லமையையும் மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறது. இருந்தாலும், கூட்டணி குறித்த முடிவை தலைவர் அறிவிப்பார்” என்றார்.

விஜயின் தேர்தல் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, “அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் திமுக மிகப்பெரிய இளைஞர் மாநாடு நடத்தியது. திமுகவிற்கு மட்டும் எப்படி அனுமதி எளிதில் கிடைக்கிறது? 50,000-க்கும் மேல் கூட்டம் கூட வாய்ப்பு இருந்தால், 30 நாட்களுக்கு முன்பாக அனுமதி கடிதம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. அப்படி இருக்கும்போது திமுகவிற்கு மட்டும் எப்படி அனுமதி கிடைக்கிறது?அவர்கள் நினைத்தால் ஒரு வாரத்தில் ஒரு நாளில் அனுமதி கிடைக்கிறது. வார வாரம் நாங்கள் மாநாடு நடத்துவோம் என்று அந்தக் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்.. இது ஜனநாயகமா? ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்கிறதா?

ADVERTISEMENT

ஆனால் திமுகவிற்கு பயம் வந்து விட்டது என்பதை காட்டுகிறது. விஜய் மக்களை சந்திக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று ரெம்பவே முயற்சிக்கிறார்கள். மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share