புதுச்சேரி காவல்துறை குற்றங்களை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (SSP) கலைவாணன் தலைமையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்காக மூன்று மாதத்திற்கு ஒருமுறை ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற பெயரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்மூலம் அதிரடியாக ரெய்டு நடத்தி ரவுடிகளை கைது செய்து புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹான்ஸ், சிகரெட், பீடி உள்ளிட்ட போதை பொருட்கள் எந்தவித தடையுமின்றி குற்றவாளிகள் மத்தியில் புழங்கி வருவதாக புகார் எழுந்து வந்தது.
மேலும் கடந்த 26ஆம் தேதி சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு அவர்களின் ஆதரவாளர்கள் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, புகையிலையை வெளியிலிருந்து உள்ளே தூக்கி எறியப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து எஸ்.எஸ்.பி. கலைவாணன் ஆலோசனைப்படி Anti-Rowdy Squad Team புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்குள் களமிறங்கியது. இதுகுறித்து சிறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு தெரிவிக்கப்பட்டு சிறைச்சாலையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, தண்டனை பெற்ற குற்றவாளிகளான பாபு, சிலம்பரசன் என்ற அஸ்வின், சிலம்பரசன், பிரசாத் மற்றும் சிவா ஆகியோரிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
அவை,
- ஹான்ஸ் பாக்கெட் – 50
- பீடி கட்டு – 30
- கஞ்சா இலைகள் – 110 கிராம்
- சிகரெட் லைட்டர் – 6
- Nokia மொபைல் போன் – 1
- BSNL சிம் கார்டு – 1

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் பிணையில் வெளிவந்த குற்றவாளிகளான ரிஷி குமார் மற்றும் ஆனந்த் ஆகியோர் சிறைச்சாலையின் கிழக்கில் இருக்கும் மதில் வழியாக தடை செய்யப்பட்ட பொருட்களை உள்ளே இருக்கும் குற்றவாளிகளுக்காக தூக்கி எறிந்தது தெரிய வந்தது.
மேலும் இதற்கு மூளையாக செயல்பட்டது சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளான ரெயின்போ நகரை சேர்ந்த சத்யா என்ற சிவபெருமாள் மற்றும் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த தாடி ஐயனார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை மத்திய சிறைச்சாலையில் கைப்பற்றியது சம்மந்தமாக சிறை துணை கண்காணிப்பாளர் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காலப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்படி தடை செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றுவதற்க்கு காரணமாக இருந்த Anti-Rowdy Squad அணியை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.