தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 18) அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரும். மேலும் நவம்பர் 22-ந் தேதி, தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. இதேபோல் 14 இடங்களில் கனமழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ மழையும், நாலுமுக்கு கோடியக்கரையில் தலா 13 செ.மீ மழையும் பெய்துள்ளது. திருக்குவளை காக்காச்சியில் தலா 12 செ.மீ மழையும் நாகை வேளாங்கண்ணியில் தலா 11 செ.மீ மழையும் பெய்துள்ளது.
இதேபோல் தலைஞாயிறு திருப்பூண்டி, மாஞ்சோலை, திருத்துறைப் பூண்டியில் தலா 9 செ.மீ மழையும் பெய்துள்ளது.
அதிராம்பட்டினம், சீர்காழியில் தலா 8 செ.மீ மழையும், முத்துப்போட்டை திருவாரூர், கொள்ளிடம், செம்பனார் கோயிலில் தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை கொட்டிவருவதால் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை செங்கல்பட்டு, சென்னை, கூடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகபட்டினம், திருவாரூர் , தஞ்சாவூர், திருவள்ளூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
