இந்தி திரையுலகில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராகத் திகழ்பவர் சி.கே.முரளிதரன். ’ஏக் சோட்டிஸி லவ் ஸ்டோரி’ படத்தில் அறிமுகமான இவர், ராஜ்குமார் ஹிரானியின் ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘டன்கி’ உட்படசுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். விளம்பரப் படங்கள், குறும்படங்கள் போன்றவற்றிலும் தனது பங்களிப்பைத் தந்து வருகிறார்.
இவரது மகள் கார்த்திகா, மலையாளத்தில் ’காம்ரேட் இன் அமெரிக்கா’, ‘அங்கிள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அசோக்செல்வன் ஜோடியாக ‘சபாநாயகன்’ படத்தில் தோன்றியிருந்தார். அதில் பள்ளிப்பருவம் மற்றும் திருமண காலத்தில் இருக்கிற பெண்ணாக அவர் நடித்தது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.

கிட்டத்தட்ட டாப்ஸி பன்னு, ரிது வர்மா, ரித்திகா சிங், ருக்மிணி வசந்த் போன்று ‘மெச்சூர்டு கேர்ள்’ தோற்றம் கொண்ட கார்த்திகாவுக்கென்று இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
தற்போது இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள தனி இசைப்பாடலான ‘தூத்துக்குடி சின்னப்பொண்ணு’ வீடியோவில் இடம்பெற்றிருக்கிறார். சாமுவேல் நிக்கோலஸ் உடன் தீப்தி சுரேஷ், ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார்.
ஜென்ஸீ தலைமுறை ரசிகர்களுக்குப் பிடித்துப் போகிற வகையில் அமைந்திருக்கிற ‘தூத்துக்குடி சின்னப்பொண்ணு’வில் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கார்த்திகா இணைந்து தோன்றியிருப்பது தற்போது சமூகவலைதளங்களில் ‘வைரல்’ ஆகி வருகிறது.