அசோக் செல்வனுக்கு அடுத்த வெற்றிப்படமா?
போர்தொழில் படத்திற்குப் பிறகு, அசோக்செல்வன் மீது மிகப்பெரிய வெளிச்சம் விழுந்திருக்கிறது. அதற்கு எந்தவிதக் குறையும் இல்லாத வகையில் அடுத்த படம் அமைய வேண்டுமென்ற பதற்றம் அவருக்கு நிச்சயம் இருக்கும். அப்படியொரு சூழலில், தற்போது ‘சபாநாயகன்’ வெளியாகியிருக்கிறது. இதனைப் புதுமுக இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார். லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் ட்ரெய்லரே ‘இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம்’ என்று கட்டியம் கூறியது. படமும் அதற்கேற்ற பலன்களை நமக்கு வாரி வழங்குகிறதா?

சபா – பெயர்க்காரணம்!
சென்னை திருவான்மியூர் பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, மது அருந்துபவர்களைப் பார்த்து பார்த்து கைது செய்கிறது காவல் துறை. போலீசார் ரோந்து வரும்போது, ஒரு பெருங்கூட்டமே தப்புகிறது. அரவிந்த் (அசோக் செல்வன்) எனும் நபர் மட்டும் அவர்களிடம் மாட்டிக் கொள்கிறார்.
வழியில் பிடிபடும் ஒரு இளைஞர், காதல் தோல்வியுற்ற காரணத்தால் தான் முதன்முறையாக மது அருந்த முயன்றதாகச் சொல்கிறார். அதனைக் கேட்டதும், இன்ஸ்பெக்டர் விஷ்ணு (மைக்கேல் தங்கதுரை) அந்த நபரை விட்டுவிடுமாறு கான்ஸ்டபிள்களிடம் கூறுகிறார். அதைக் கேட்டதும், ‘ஒரு காதலுக்கே இப்படி பீல் ஆகுறீங்களே, எனக்கு எத்தனை காதல் இருக்குது தெரியுமா’ என்று கதை சொல்லத் தொடங்குகிறார் அரவிந்த்.
பள்ளிப் பருவத்தில் ஈஷா (கார்த்திகா முரளிதரன்) என்ற மாணவியை ஒருதலையாகக் காதலித்ததையும், பன்னிரண்டாம் வகுப்பு முடியும் வரை அதனை அவரிடம் தெரிவிக்க முடியாமல் போனதையும் விலாவாரியாக விவரிக்கிறார்.

அதன்பிறகு, பொறியியல் கல்லூரியில் படிக்கையில் ரியா (சாந்தினி சவுத்ரி) என்ற பெண்ணிடம் ஈர்ப்பு வந்ததாகச் சொல்கிறார். வேறொரு பாடப்பிரிவைச் சார்ந்த அவரைக் காதலிக்க முயன்றபோது ஏற்பட்ட இடையூறுகள், பிரச்சனைகள், அடிதடிகளைச் சமாளித்தது பற்றி விவரிக்கிறார்.
கல்லூரி முடிந்ததும், தற்செயலாகத் தனது சகோதரி வைத்திருக்கும் ஜவுளிக்கடையில் மீண்டும் ரியாவைச் சந்திக்கிறார் அரவிந்த். மெல்ல அவரோடு பழகத் தொடங்குகிறார். அவரிடம் தனது காதலைச் சொல்ல முயற்சிக்கிறார். அப்போதுதான், அவர் வேறொருவரை விரும்புவது தெரிகிறது.
அந்த துயரத்தில் இருந்து விடுபட மது போதையை நாடாமல், அடுத்து எம்பிஏ படிக்கச் செல்கிறார். அங்கு மேகா (மேகா ஆகாஷ்) எனும் பெண்ணைக் கண்டதும் காதலில் விழுகிறார். அவரிடமாவது அரவிந்த் தனது காதலைச் சொன்னாரா? அந்தக் காதல் என்னவானது? இது போன்ற கேள்விகள், அவரது கதையைக் கேட்கும் விஷ்ணுவிடமும் இரண்டு கான்ஸ்டபிள்களிடமும் (மயில்சாமி மற்றும் உடுமலை ரவி) மிகுகின்றன.
அவர்களுக்கு அரவிந்த் என்ன பதில் சொன்னார்? அவருக்கு நல்லதொரு காதல் வாழ்க்கை அமைந்ததா என்று சொல்கிறது ‘சபாநாயகன்’ படத்தின் மீதி.
‘ஆட்டோகிராஃப்’, ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ’96’, ‘3’, மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’, ‘ஜூன்’ மற்றும் அசோக் செல்வன் நடித்த ‘நித்தம் ஒரு வானம்’ உட்படச் சில படங்களை நினைவுபடுத்தினாலும், படம் முழுக்க வாய்விட்டுச் சிரிக்க வைத்த விதத்தில் வேறுபடுகிறது ‘சபாநாயகன்’. அதுவே இந்த படத்தின் யுஎஸ்பி.
இந்த படத்தில் மையப்பாத்திரமான அரவிந்தின் இனிஷியல் ச.பா. அதுவே, அவரை நண்பர்கள் ‘சபா’ என்றழைப்பதாகக் காரணம் சொல்கிறார் இயக்குனர். திரைக்கதையின் ஓட்டத்தில் அதனைச் சொல்லிச் சென்றிருப்பது டைட்டிலுக்கு அர்த்தம் சேர்க்கிறது.
இன்னொரு வெற்றிப்படம்!
அசோக்செல்வனுக்கு இது இன்னொரு வெற்றிப்படம் என்று தாராளமாகச் சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸில் அத்தகைய வெற்றி கிடைக்கிறதா என்பதைத் தாண்டி, அவரது ரசிகர்களை இப்படம் நிச்சயம் திருப்திப்படுத்தும். அவர்களைக் கவரும் வகையில், அவர் நகைச்சுவையையும் காதலையும் திரையில் கொட்டியிருக்கிறார்.
இதில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி என்று மூன்று நாயகிகள். இவர்களைத் தவிர்த்து, ‘இவரும் நாயகியா’ என்று யோசிக்கிற வகையில் விவ்யா சந்த், ஷெர்லின் சேத், அக்ஷயா ஹரிஹரன் உட்படச் சில அழகிகள் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களது பாத்திரங்களும் ரசிக்கும்படியாகவே திரையில் வடிக்கப்பட்டிருக்கின்றன.
மேகா ஆகாஷ் பளீரென்று வந்து இரண்டாம் பாதியை ஆக்கிரமிக்கிறார். அவருக்கு இணையான முக்கியத்துவம் கல்லூரிப் பருவத்து காதலியாக வரும் சாந்தினி சவுத்ரிக்குத் தரப்பட்டுள்ளது.

ஆனால், படம் முழுக்க கார்த்திகாவே வியாபித்திருக்கிறார். அந்த ஒரு அம்சமே, ‘சபாநாயகன்’ திரைக்கதையின் அடிநாதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
’கொஞ்சம் பெரிய பெண்’ தோற்றம் கொண்டிருந்தாலும், பள்ளிச்சீருடையில் பாந்தமாக வந்து போயிருக்கிறார் கார்த்திகா. இந்தப் படத்திற்குப் பிறகு, அவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் தமிழில் உருவாவது நிச்சயம்.
மறைந்த மயில்சாமி இதில் நம்மைக் கலகலப்பூட்டுகிறார். அவருடன் வரும் உடுமலை ரவியும் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார். மைக்கேல் தங்கதுரை இடம்பெறும் காட்சிகள் குறைவென்றாலும், அவருக்கும் இதில் முக்கியமான கதாபாத்திரம்.
இவர்கள் தவிர்த்து நாயகன் நாயகியின் பெற்றோர், உறவினர்கள், பள்ளி மற்றும் கல்லூரியைச் சார்ந்தவர்கள் உட்படப் பலர் இதில் வந்து போயிருக்கின்றனர்.
ஆனாலும், அசோக் செல்வனின் நண்பர்களாக வரும் ’நக்கலைட்ஸ்’ அருண்குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ் ‘அட்ராசிட்டி’கள் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன.
குறிப்பாக, டாக்டர் தோற்றத்தில் அருண்குமார் தனது காதலியைச் சந்திக்கும் காட்சியில் சிரிக்காமல் இருக்கவே முடியாது.
’மான் கராத்தே’ சிவகார்த்திகேயனை நினைவூட்டும் ஜெய்சீலன் சிவராம் உட்படப் படத்தில் இடம்பெற்ற இளைஞர்கள் பலர் ‘ஹீரோ’ லுக்கில் வலம் வந்திருப்பது இப்படம் தரும் இன்னொரு ஆச்சர்யம்.
பல்வேறு கால இடைவெளியில் உருவாக்கப்பட்ட காரணத்தினால் நோக்கத்தினால், இதில் பாலசுப்பிரமணியெம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என்று மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருக்கின்றனர். அந்த வித்தியாசம் ஏதும் தெரியாதவாறு, படம் ‘கலர்ஃபுல்’லாக இருக்கிறது.
கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு சீராகத் திரையில் கதை விரிய உதவியிருக்கிறது. சில இடங்களில் சம்பந்தமில்லாத ஷாட்களை காட்டுவது போன்று தோன்றினாலும், அதற்கும் திரைக்கதையில் விளக்கம் தரப்பட்டிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
ஜி.சி.ஆனந்தனின் கலை வடிவமைப்பு, படம் முழுக்கப் பளிச்சென்று காட்சியாக்கம் தென்பட உதவியாக இருக்கிறது.
ராஜு சுந்தரம், பிருந்தா மற்றும் லீலாவதியின் நடன அமைப்பு பாடல்களை ‘விஷுவல் பியூட்டி’ ஆக்கியிருக்கிறது. ’பேபிமா’, ‘சீமக்காரியே’, ‘சிக்கிட்டா’ என்று மூன்று பாடல்களிலும் அசோக் செல்வனுக்கு ‘சிக்னேச்சர் ஸ்டெப்கள்’ அமைந்திருப்பது, இளையோரிடம் அவருக்கான வரவேற்பை இன்னும் அதிகரிக்கும்.
பாடல்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவையூட்டும் காட்சிகள் மிக வேறுபட்ட பின்னணி இசையைத் தந்து அசத்தியிருக்கிறார் லியோன் ஜேம்ஸ். அவரைப் படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு அவரது பங்களிப்பு அமைந்திருக்கிறது.
‘டேட் ஆஃப் பெர்த் கேட்டுட்டு என்னை தம்பின்னு சொல்லிட்டாடா’, ‘நாசா சயிண்டிஸ்ட்னு சொன்னா டௌரி கூடக் கொஞ்சம் கிடைக்கும்’ என்பது போன்ற வசனங்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. அதற்கிணையாக, ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்புவை நினைவூட்டும் சில ‘சிச்சுவேஷன் காமெடி’களும் இதிலுண்டு.

யதார்த்தமான நிகழ்வுகளோடு சினிமாத்தனமான திருப்பங்களும் கொண்டிருக்கின்றன பெரும்பாலான காட்சிகள். ஆனால், அவற்றில் நிறைந்திருக்கும் இயல்பான நகைச்சுவை முக்கால்வாசி படத்தை மிக எளிதாக நகர்த்திச் செல்கிறது.
யார் இந்த டைரக்டரு?!
சில படங்களைப் பார்த்தால் இயக்குனர்களைப் பாராட்டத் தோன்றும் அல்லது வறுத்தெடுக்கத் தோன்றும். சிலவற்றைப் பார்த்தால் கொண்டாடத் தோன்றும். மிகச்சில படங்கள் மட்டுமே, ‘யார் இந்த டைரக்டரு, எனக்கே இவரைப் பார்க்கணும் போலிருக்கே’ என்று சொல்ல வைக்கும்.
‘சபாநாயகன்’ பார்த்தபோது எனக்கு அதுவே தோன்றியது. அந்த அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் தானே தியேட்டரில் உட்கார்ந்து ரசிக்கும் அளவுக்கு ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன்.
இதில் குறைகள் இருக்கிறதா? நிச்சயம் உண்டு. ’பள்ளி, கல்லூரி பருவத்து காதலை மையப்படுத்தி இளைய தலைமுறையைக் கெடுக்காதீங்க’ என்ற குற்றச்சாட்டுக்கு இப்படமும் இலக்காகி இருக்கிறது.
கிளைமேக்ஸை மனதில் வைத்தே இந்த திரைக்கதையை எழுதியிருந்தாலும், கிட்டத்தட்ட 85% படம் நம்மை வேறொரு பரப்பில் நடமாடவிட்டிருக்கிறது. அந்த வகையில் மீதமுள்ள பகுதி அந்தளவுக்குத் திருப்தி தருவதாக இல்லை.
வழக்கமான கமர்ஷியல் பட எதிர்பார்ப்பை இப்படத்தின் திரைக்கதை நிச்சயம் நிறைவேற்றாது. அதேநேரத்தில், ரொம்பவே சீரியசான அல்லது பீல்குட் படத்திற்கான உணர்வெழுச்சிகளும் இதில் நிறைந்திருக்காது. ஆனால், இவ்விரண்டுக்கும் இடையேயான ஒரு ஏரியாவை தனக்கென்று குத்தகைக்கு எடுத்திருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன். அதனை அவர் திறம்படத் திரையில் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு நிச்சயம் சிவப்புக் கம்பள வரவேற்பை வழங்கும்.
ஒரு டீமாக ஒன்று சேர்ந்து சென்று கலாட்டாவாக படம் பார்க்க ‘சபாநாயகன்’ சரியான சாய்ஸ். ஆதலால், இதனைக் குடும்பத்தோடு ரசிக்க முடியும். அதேநேரத்தில், கல்லூரி இளைஞர்களும் இளைஞிகளும் இந்த படம் ஓடும் தியேட்டர்களை மொய்ப்பது உறுதி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
காலநிலை மாற்றம் மீதான தேசிய கருத்தரங்கம்: ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க அழைப்பு!
