இந்தாண்டு தீபாவளிக்கு அதிகளவு பட்டாசு வெடித்ததன் காரணமாக தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி என்றாலே வானத்தை வர்ணமிழக்கும் வகையில் வெடிக்கும் பட்டாசுகளுக்கு பஞ்சமிருக்காது. இதில் எந்த அளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அதே அளவு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம்.
நேற்று தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காற்று மாசுபாடு உச்சத்தை எட்டியது.
குறிப்பாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள வட இந்திய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) மிக மோசமான நிலையை அடைந்தது.
2025 தீபாவளிக்குப் பிறகு, டெல்லியில் PM2.5 துகள்களின் சராசரி செறிவு 488 µg/m³ என்ற அளவைத் தொட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது. இது, பண்டிகைக்கு முந்தைய அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான ஒன்றாகும்.
டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டைக் குறைக்க முயற்சியாக செயற்கை மழை திட்டம் இருப்பதாக அம்மாநில அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான மேகங்கள் வானில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது அம்மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மாநிலங்களை வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மாசு அளவு குறைவாக உள்ளது.
நேற்று சென்னை போன்ற பெருநகரங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) ‘மோசம்’ என்ற பிரிவில் (சுமார் 250 வரை) இருந்தது. இது வட இந்திய நகரங்களின் ‘மிக மோசம்’ அல்லது ‘அபாயம்’ (Severe) என்ற நிலையை விடக் குறைவானதாகும். எனினும் இதுவும் கவலைக்குரிய நிலையாகவே உள்ளது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தென் இந்திய மாநிலங்களை விட வட இந்திய மாநிலங்கள் காற்று மாசுபாடால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணங்களை சூழலியல் வல்லுநர்கள் அடுக்கி வருகின்றனர்.
புவியியல் தடை
வட இந்தியாவின் நகரங்கள் இமயமலைச் சங்கிலியால் சூழப்பட்ட இந்தோ-கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளன. இதனால் மாசு கலந்த காற்று வெளியேறிச் செல்ல முடியாமல் நகரங்களுக்குள்ளேயே சிக்கிவிடுகிறது
பயிர்க் கழிவு எரிப்பு
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு பயிர்க் கழிவுகளை எரிப்பது, மிகப்பெரிய அளவில் PM2.5 மற்றும் PM10 துகள்களை டெல்லிக்கு அனுப்புகிறது.
தொழில் மற்றும் வாகனப் புகை
அதிக மக்கள் தொகை அடர்த்தி, வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் மாசுக் கழிவுகள் இங்கு அதிகமாக உள்ளன.
வானிலை:
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான காற்று, மாசுத் துகள்களை பூமியின் மேற்பரப்புக்கு அருகில் தேக்கி வைப்பதால், பனிப்புகை அதிகரிக்கிறது.
பயிர்க் கழிவு எரிப்பு இல்லை!
தென் மாநிலங்களில் தீபாவளியின்போது ஏற்படும் மாசுபாடு பெரும்பாலும் பட்டாசு வெடிப்பு மற்றும் உள்ளூர் வாகனப் புகை, தொழிற்சாலைகள் ஆகியவற்றின் தாக்கமே ஆகும். வட இந்தியாவில் உள்ள பயிர்க் கழிவு எரிப்பு போன்ற பிராந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
