இளைஞராஜா பாராட்டு விழாவுக்கு பெண்களை ஏன் அழைக்கவில்லை என்று பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.
இந்தநிலையில் இளையராஜா பாராட்டு விழாவுக்கு பெண்களை ஏன் அழைக்கவில்லை என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
கமலாலயத்தில் இன்று பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் ‘சிந்தனை அமர்வு’ கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் எவ்வளவுக்கு கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இங்கு குடும்ப அரசியல் தான் நடக்கிறது.
சமீபத்தில் இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில், அவர்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் தான் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்கள். பெண்களை பற்றி பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அந்த கூட்டத்துக்கு ஒரு பெண் கூட வந்ததாக நான் பார்க்கவில்லை.
இளையராஜா இசையில் எந்த பெண்ணும் பாடவில்லையா? ஒரு பெண்ணை கூட அழைக்கவில்லை. அரசாங்கம் சார்பாக நடத்தும் நிகழ்ச்சியில் ஒரு பெண் கூட கலந்து கொள்ளாதது ஏன்? நான் கூட விசாரித்துவிட்டேன். அவர்கள் பெண்களை அழைக்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.