அரசு பாராட்டு விழா நடத்துவது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ.. அதே அளவுக்கு எனக்கும் சந்தோஷம் என்று இளையராஜா கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
1975ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பொன்விழா ஆண்டை கொண்டாடவுள்ளார்.
இந்தநிலையில் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரும் 13ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 9) அரசு வெளியிட்ட அறிவிப்பில், “ வரும் 13.9.2025 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும். அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடைபெறும். இவ்விழாவில். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை வழங்குவார்.
தொடர்ந்து நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றுவார். உலக நாயகன் கமல்ஹாசன் எம்.பி.யும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் வாழ்த்துரை வழங்குவார்கள்.
நிறைவாக இளையராஜா எம்.பி., ஏற்புரை நிகழ்த்துவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்திவிட்டு சென்னை திரும்பிய இளையராஜா, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் தமிழக அரசின் பாராட்டு விழா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், ”அரசு ஒரு கலைஞருக்கு பாராட்டு விழா நடத்துவது இதுவே முதல்முறை. உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ.. அதே அளவுக்கு எனக்கும் சந்தோஷம்..” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.