டாஸ்மாக் வழக்கு விசாரணையை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற கோரி தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஏப்ரல் 3) முறையிடப்பட்டுள்ளது. Appeal to transfer TASMAC case to another bench
கடந்த மார்ச் 6 முதல் 8ஆம் தேதி வரை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை கடந்த மார்ச் 20 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில்குமார் அமர்வு, அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, “பெண் அதிகாரிகளை காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை அமலாக்கத் துறை சிறைபிடித்து வீட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்தது” என்று டாஸ்மாக் நிறுவனம் குற்றச்சாட்டை முன் வைத்தது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி, எவ்வித காரணமும் இன்றி இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் அறிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் அமர்வுக்கு இந்த வழக்கை தலைமை நீதிபதி மாற்றினார்.
இதைத்தொடர்ந்து வழக்கு ஏப்ரல் 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் 48 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
அதில், “விசாரணை என்ற பெயரில் தங்களது ஊழியர்களை தொந்தரவு செய்ததாக டாஸ்மாக் நிறுவனம் கூறுகிறது. ஆனால், எந்த ஊழியரும் துன்புறுத்தல் அல்லது மனித உரிமை மீறல் பற்றிய புகாரை அமலாக்கத்துறை மீது கொடுக்காத போது டாஸ்மாக் நிறுவனம் எவ்வாறு இப்படி ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்ய முடியும்?” என்ற கேள்வி எழுப்பியிருந்தது.
அமலாக்கத் துறையின் பதில் மனுவை தொடர்ந்து இந்த வழக்கு ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில், டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், “நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் இடம் பெற்றிருக்கும் நீதிபதி ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் ஆவார். அதனால் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும்” என்று முறையீடு செய்துள்ளார்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தலைமையிலான அமர்வில் இது தொடர்பாக முறையிடும்படி அறிவுறுத்தியது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. Appeal to transfer TASMAC case to another bench
s