இந்திய ஸ்பான்சர்ஷிப் உரிமையை 579 கோடி ரூபாய்க்கு அப்பல்லோ டயர்ஸ் வாங்கியுள்ளது.
மத்திய அரசின் ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2025 காரணமாக இந்திய கிரிக்கெட் அணிக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து Dream11 வெளியேறியது.
இதனால் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2025 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சர் இல்லாமல் விளையாடி வருகிறது.
இதற்கிடையே புதிய ஸ்பான்ஸருக்கு பிசிசிஐ டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் குர்கானை தளமாகக் கொண்ட அப்பல்லோ டயர்ஸ் (ரூ.579 கோடி), கேன்வா (ரூ.544 கோடி) மற்றும் ஜேகே சிமென்ட்ஸ் (ரூ.477 கோடி) ஆகிய மூன்று நிறுவனங்கள் ஏலம் கோரியிருந்தன.
இதில் அதிக தொகைக்கு ஒப்பந்தப் புள்ளியை கோரிய அப்பல்லோ டயர்ஸ் இந்திய கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப் உரிமையை வாங்கியுள்ளது.
இந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகள் நீடிக்கும். அதில் 121 இருதரப்பு போட்டிகளும், 21 ஐசிசி போட்டிகளும் அடங்கும்.
இந்த ஒப்பந்தம் மூலம் சராசரியாக ஒரு ஆட்டத்திற்கு 4.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருதரப்பு மற்றும் ஐசிசி போட்டிகளை பொறுத்து ஒப்பந்தத் தொகை மாறுபடும்.
புதிய ஸ்பான்சரான அப்பல்லோ டயர்ஸின் சர்வதேச பயணம், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட உள்நாட்டுத் தொடரில் இருந்து தொடங்க உள்ளது.
எனினும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கும் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட 50 ஓவர் தொடரின் போது புதிய ஸ்பான்சரின் லோகோ இடம்பெறும் என பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.