’இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’ என்று குறிப்பிட்ட சில படங்களின் வழியே ‘டெரர்’ வில்லனாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அனுராக் காஷ்யப். இந்திப் படவுலகில் வித்தியாசமான படைப்புகளைத் தருகிற இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். ’பாஞ்ச்’, ‘ப்ளாக் பிரைடே’ தொடங்கி ‘தேவ் டி’, ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் 1 & 2’, ‘அக்லி’, ‘மன்மர்ஸியன்’ எனப் பல பிரபலமான படங்களைத் தந்த இவரது சமீபத்திய படைப்பு ‘நிஷாஞ்சி’.
ஆய்ஷ்வரி தாக்கரே, மோனிகா பன்வர், குமுத் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி, இந்தியிலுள்ள பல பத்திரிகைகள், யூடியூப் சேனல்களுக்கு ‘ஒன் மேன் ஷோ’ போன்று பேட்டிகளை வாரியிறைத்து வருகிறார் அனுராக்.
அப்படி ‘பிலிம்க்யான்’ எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் பயோபிக்கை நீங்கள் இயக்கப் போகிறீர்களா’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ‘இல்லை, நான் இயக்க மாட்டேன்’ என்று பதிலளித்தார் அனுராக்.
’ஒருவேளை நீங்கள் இயக்கினால் அந்தப் படம் எப்படியிருக்கும்’ என்று கேள்வி கேட்கப்பட, ”குழந்தைகள் உட்படப் பலருக்கு அவர் இப்போதே ஹீரோவாகத்தான் இருக்கிறார். அதனால், உண்மையிலேயே அவரை எப்படிக் காட்டுவது என்று தெரியவில்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், ஒரு மனிதரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற ரீதியில் கோஹ்லியைக் காட்டவே விருப்பப்படுவேன்” என்று பதிலளித்திருக்கிறார்.
நேர்மை, வெளிப்படைத்தன்மை என்று கோஹ்லிக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறதே என்று தொகுப்பாளர் கேட்டதும், ”கோஹ்லி ரொம்பவே அழகானவர். அவரை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும். ரொம்பவே நம்பகமான ஒரு மனிதர். ரொம்பவே உணர்ச்சிவயப்படுபவர். ஈடிணையற்ற ஆளுமை அவர்” என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார் அனுராக் காஷ்யப்.
ஒரு படத்தை ‘புரோமோட்’ பண்றதுக்குள்ள ‘என்னென்ன’ டாபிக்லாம் பேச வேண்டியிருக்குது..?