சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 1.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது. தொடர் புகார்களை அடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தலைமையில் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடைபெற்றது.
அப்போது சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலக வளாகத்தில் இருந்த இடைத்தரகர் ரமேஷ் என்பவரிடம் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அலுவலகத்தில் இருந்த சார் பதிவாளர்கள் ரகு உத்தமன், ஜெசிந்தா மற்றும் இடைதரகர் ரமேஷ் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி 1.90 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.