கோவை மாவட்டம் அன்னூர் அருகே வீட்டு மனையை வரன்முறை செய்ய பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் முத்துசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கொண்டயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விக்ரமராஜ். இவர் தனது மனைவி பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத வீட்டு மனையை வரன்முறை படுத்த கொண்டையம் பாளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஊராட்சி செயலாளர் முத்துசாமி மனுவை பெற்ற நிலையில், இந்த மனு மீது ஆய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டுமனையை வரன்முறை செய்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவினை விக்ரம்ராஜிடம் வழங்க 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் முத்துசாமி கேட்டுள்ளார். ஆனால் பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுக்க முடியும் என விக்ரம் ராஜ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து விக்ரம் ராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அ அறிவுறுத்தலின்படி நேற்று (செப்டம்பர் 10) இரவு ரசாயன பொடி தடவிய பத்தாயிரம் ரூபாய் பணத்தினை கொண்டாயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஊராட்சி செயலாளர் முத்துசாமியிடம் மனுதாரர் விக்ரம் ராஜ் வழங்கினார். அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊராட்சி செயலாளர் முத்துசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.









