அனில் அம்பானி மற்றும் அவரது குழும நிறுவனங்களுக்கு எதிரான வங்கி மோசடி புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்க உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 4) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 39 வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள அரசு செயலாளர் சர்மா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “வங்கிகளிடம் பெற்ற ரூ.41,921 கோடி நிதியை அனில் அம்பானி முறைகேடாக கையாண்டுள்ளார். இதில் 28,874 கோடி, குழுமத்தின் மற்ற நிறுவனங்களுக்கும், விளம்பரதாரர்களுடன் தொடர்புடைய போலி நிறுவனங்களுக்கும் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது. மொரிஷியஸ், சைப்ரஸ் போன்ற நாடுகளில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் வழியாக சுமார் ரூ.13,047 கோடி நிதி இந்தியாவுக்குள் மீண்டும் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே இந்திய வங்கி மற்றும் நிதித்துறையில் மீண்டும் இது போன்ற மோசடிகள்நடக்காமல் இருக்க கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (பிப்ரவரி 4) தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வங்கிக் கடன் மோசடிகளில் கடந்த காலங்களில் பலர் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். எனவே அனில் அம்பானி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதங்களை முன்வைத்தார்.
இதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘அனில் அம்பானி மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பப்பட்டிருப்பதால், முன்னதாகவே அவர் வெளிநாடு செல்வது தடுக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார்.
அப்போது அனில் அம்பானி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘அனில் அம்பானி நீதிமன்றத்தின் முறையான அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறமாட்டார்’ என்று உறுதியளித்தார்.
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இதுபோன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு முகில் ரோத்தகி உறுதியளித்தார். ஆனால் அந்த நபர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார்’ என்றார்.
இந்த வாதத்துக்கு பதிலளித்த முகுல் ரோத்தகி, ‘அந்த நபர் திரும்பி வந்து பணத்தை செலுத்திவிட்டார்’ என கூறினார்.
இந்தநிலையில், “அனில் அம்பானியின் ரிலையன்ஸ் திருபாய் அம்பானி குழும நிறுவனங்கள், பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று அவற்றை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.40,000 கோடி ஆகும். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இதுதொடர்பாக தனி தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது” என்று சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தபோது, மற்ற வங்கிகளின் புகார்கள் தொடர்பாக தனித்தனி எஃப்.ஐ.ஆர்கள் ஏன் பதிவு செய்யப்படவில்லை என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘”முதலில் எஸ்பிஐ புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, மற்ற வங்கிகளும் நிதி முறைகேடு குறித்துப் புகார் அளித்தன. அந்தப் புகார்கள் அனைத்தும் ஒரே மோசடித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அவை அனைத்தும் தற்போது அதே முதல் எப்-ஐ-ஆர்-லேயே இணைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
இதற்கு தலைமை நீதிபதி, மற்ற வங்கிகளிடமிருந்து வரும் புகார்கள் தனித்தனி பரிவர்த்தனைகளைக் குறிக்கின்றன, எனவே தனித்தனி எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நிதி முறைகேடு குறித்த முதல் அறிக்கை 2020 ஆம் ஆண்டு பாங்க் ஆஃப் பரோடாவிலிருந்து வந்தது என்றும், ஆனால் எஸ்பிஐயின் புகாருக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டுதான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது” என்றும் கூறினார்.
அனில் அம்பானி சார்பில், ‘நிதியை மோசடி செய்யவில்லை. உண்மையான கடனைத் திருப்பிச் செலுத்தாததை குற்றமாகக் கருதக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து, ‘இந்த விவகாரத்தில் சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் கால தாமதம் செய்துவிட்டன. எனவே இனி விரைவாக செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதேசமயம் உண்மைகளைக் கண்டறிய அமலாக்கத்துறையின் மூத்த அதிகாரிகள் அடங்கிய ‘சிறப்பு புலன் விசாரணை குழுவை’ அமைக்க வேண்டும்.
இந்தச் சதி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அடுத்த நான்கு வாரங்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
