2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இலங்கை – வங்கதேசம் இடையேயான ஆட்டத்தில், ஷகிப் அல் ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ ஆகியோர் அதிரடியால், வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கைக்கு சரித் அலங்கா 105 ரன்கள் சேர்க்க, அந்த அணி 279 ரன்கள் சேர்த்தது. ஆனால், பின் களமிறங்கிய வங்கதேச அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷன்டோ 90 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 82 ரன்களும் விளாச, 42வது ஓவரிலேயே இலக்கை எட்டி, வங்கதேசம் அபார வெற்றி பெற்றது. Angelo Mathews was dismissed
இந்த தோல்வியின் மூலம், இலங்கை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 24.2 ஓவரில் சதீரா சமரவிக்ரமா ஷகிப் அல் ஹசனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதை தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் களத்திற்கு வந்தார். ஆனால், ஹெல்மெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர் பேட்டிங் செய்ய துவங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டது.

இது குறித்து, வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையிட, கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அட்டமிழந்ததாக அறிவித்தனர்.
‘டைம் அவுட்’ முறை என்றால் என்ன?
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியின் விதிகளின்படி, கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் ஆட்டமிழந்த அடுத்த 3 நிமிடங்களுக்குள் (உலகக்கோப்பை போட்டிகளில் 2 நிமிடம்) அடுத்த வீரர் களத்தில் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும். அவ்வாறு வர தவறினால், எதிரணி நடுவர்களிடம் முறையிடும் பட்சத்தில், தாமதமாக வந்த அந்த வீரர் ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்க நடுவர்களுக்கு அதிகாரம் உண்டு.

இந்த போட்டியில், ஹெல்மெட் காரணமாகவே தாமதமானதாக ஏஞ்சலோ மேத்யூஸ் நடுவர்களிடம் முறையிட்டார். பின், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனிடமும் தனது சூழ்நிலையை விவரித்தார். ஆனால், ஷகிப் அல் ஹசன் தனது முறையிடும் முடிவை திரும்பப்பெற மறுத்ததால், நடுவர்கள் ஏஞ்சலோ மேத்யூஸை வெளியே அனுப்பினர்.
“வீடியோ ஆதாரம் உள்ளது” – ஏஞ்சலோ மேத்யூஸ்
போட்டிக்கு பிறகு ஷகிப் அல் ஹசனின் செயல்பாடு குறித்து பேசிய ஏஞ்சலோ மேத்யூஸ், “வங்கதேசம் மற்றும் ஷகிப் அல் ஹசனிடம் இருந்து இந்த அவமானகரமான செயலை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் இப்படித்தான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார்கள் என்றால், அதில் மிகப்பெரிய தவறு இருக்கிறது. நான் இன்றைய நாள் வரை ஷகிப் அல் ஹசன் மீது மிகுந்த மதிப்பை கொண்டிருந்தேன். ஆனால், அவர் தற்போது அதை முழுமையாக இழந்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வு தொடர்பாக எங்களிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும், அதை பின்னர் வெளியிட உள்ளோம் என்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் குஷல் மெண்டிஸ், “கிட்டத்தட்ட 5 நொடிகள் மீதமிருந்தபோதே ஏஞ்சலோ மேத்யூஸ் களத்திற்கு வந்துவிட்டார். அதன்பின், அவரின் ஹெல்மெட்டில் இருந்த ஸ்ட்ராப் வெளியே வந்துவிட்டது. இது முழுக்க முழுக்க ஒரு உபகரண கோளாறு. ஆனால், நடுவர்கள் அதை அந்த கோணத்தில் பார்க்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது”, என தெரிவித்துள்ளார்.
ஷகிப் அல் ஹசன் சொல்வது என்ன?
இந்த நிகழ்வு குறித்து பேசிய ஷகிப் அல் ஹசன், “இந்த சம்பவம் நடைபெறும்போது, எங்கள் அணியின் ஒரு வீரர், நாம் முறையிட்டால் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது விக்கெட்டை இழந்துவிடுவார் என கூறினார்.

அதனால், நானும் முறையிட்டேன். எனக்கு இது சரியா தவறா என்று தெரியாது, ஆனால் விதிகளில் உள்ளது. நான் ஒரு போரில் உள்ளது போல உணர்ந்தேன். அதனால், எனது அணி வெற்றி பெற தேவையான முடிவை எடுத்தேன்” என தெரிவித்துள்ளார். Angelo Mathews was dismissed
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!
குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் உலோகத் துண்டுகள்: அதிர்ச்சியில் மக்கள்!
