பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் நேற்று (ஆகஸ்ட் 10) மகளிர் மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாடு மற்றக்கட்சியினரை விட அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணியை தான் அதிகம் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதற்கு முந்தைய நாள் கடந்த 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் அக்கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ராமதாஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

அதன்படி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 3,000-க்கும் அதிகமான பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் ராமதாஸ் பங்கேற்க மாட்டார் என தெரிந்திருந்தும், பொதுக்குழு மேடையில் அவருக்கு இருக்கை போடப்பட்டிருந்தது பலரையும் ஆச்சரியம் அளித்தது.
எனினும் பொதுக்குழு கூட்டத்தை நேரலையில் கண்ட ராமதாஸ், 3000 பேர் பங்கேற்றது அறிந்து அப்செட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் அதற்கு மறுநாள் நேற்று நடைபெற்ற மகளிர் பெருவிழா மாநாடு தொடர்பாக கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் மதியம் 2 மணி வரையில் தொடர்பு கொண்டு, எவ்வளவு பேர் வருகிறார்கள், எந்த வாகனத்தில் வருகிறார்கள் என்பதை கேட்டுக்கொண்டிருந்தாராம்.

விழா அரங்கில் மொத்தம் 16,000 சேர் போடப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட 20,000 பேர் திரண்டதால் மாநாடு களைகட்டியது.
இது ராமதாஸை பெரும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் மாநாடு முடிந்து, அறைக்கு சென்ற பிறகும் மாநாடு எப்படி இருந்தது என அங்கிருந்த அனைவரிடமும் விசாரித்துள்ளார்.
அதே போன்று இன்று காலையிலும் கட்சி நிர்வாகிகள் பலரையும் அழைத்து, மாநாடு சிறப்பாக நடந்தது குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் மகளிர் மாநாட்டிற்கு கூடிய பெரும் கூட்டம் அன்புமணியை கவலை அடைய செய்துள்ளதாம்.
மேடையில் தந்தைக்கு தனியாக தான் சேர் போட்டிருந்த நிலையில், மகளிர் மாநாட்டின் முகப்பு முதல் மேடை வரை எங்கேயுமே தனது புகைப்படம் தவிர்க்கப்பட்டதை கண்டும், தனது அக்காவும், ராமதாஸின் மூத்த மகளுமான காந்திக்கு மாநாட்டில் முக்கியத்துவம் கொடுத்ததும் அன்புமணியை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.