இன்று (நவம்பர் 12) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமகவின் சின்னமான ‘மாம்பழம் சின்னத்தை’ தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என அவரது தந்தை ராமதாஸ் நேற்று (நவம்பர் 11) இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், ‘நமக்கும் தி.மு.க.வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? இன்னைக்கு தி.மு.க. ஆளுங்கட்சி. எத்தனையோ எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், தி.மு.க.வை விட நல்ல கட்சி பாமக. நல்ல செயல் திட்டம் வைத்திருக்கின்ற கட்சி. நல்ல கொள்கைகள் வைத்திருந்த கட்சி. நல்ல இளைஞர்கள் வைத்திருக்கின்ற கட்சி. அதிக இளைஞர்கள் வைத்திருக்கிற கட்சி என்றால் பாமக தான்.
நம்ம தேர்தல் வரைக்கும் எல்லாம் செய்வோம், களத்துக்கு போவோம், போராடுவோம், சத்தம் போடுவோம், வீடு வீடா போவோம். அவ்வளவு உழைப்பு நம்ம போடுவோம். ஆனால், கரெக்டா தேர்தல் நேரத்தில் திமுக காரர்கள் பூத் வேலைகளை மட்டும் ஃபோகஸ் செய்கிறார்கள். அங்க மட்டும்தான் ஃபோகஸ் பண்ணி, அங்க மட்டும்தான் கான்சென்ட்ரேட் செய்கிறார்கள். இதில் தான் நமக்கும் அவர்களுக்கும் கேப் வருகிறது. இதை நாம் சரி செய்துவிட்டால் நாம் தான் ஆளும் கட்சி.
நாம் ஒன்றியம் வாரியாக, ஊராட்சி வாரியாகத் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து, அந்தப் பூத்திற்கு நாம் பூத்தைத் பலமாக பலப்படுத்த வேண்டும்” என்று கூறி இங்கே இருக்கக்கூடிய நீங்கள் ஒரு சில மாதங்களில் எம்.எல்.ஏ.க்கள் ஆக போகிறீர்கள்… ஒரு சிலர் அமைச்சர்கள் ஆக போகிறீர்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

மேலும் அவர், “ எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை ஆழமாக தெரிந்துகொள்ள வேண்டும். மேலோட்டமாக இருந்தால் வேலைக்காகாது” என்று குறிப்பிட்டார்.
“வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 17ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். 15% இட ஒதுக்கீடு 234 தொகுதிகளிலும் போராட்டம் நடைபெறும். சிறிய பிரச்சினை கூட நடக்காமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைதாக வேண்டும். அப்போதுதான் போராட்டம் வெல்லும். மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காக பாமகவினர் போராட்டங்களை நடத்துங்கள்” என்றும் கூறினார்.
