பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கிய மக்கள் டிவி, பசுமை தாயகத்தை அன்புமணி அபகரித்து விட்டதாக பாமக சிறப்பு பொதுக்குழுவில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையேயான பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று ஆகஸ்ட் 17ந்தேதி பட்டானூர் சங்கமித்ரா அரங்கில் சிறப்பு பொதுக்குழு நடைபெற்றது. கூட்டத்தில் ராமதாஸ் கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவார் என ஒருமனதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் வாசிக்கப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை ராமதாஸிடம் வழங்கப்பட்டது.
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சட்டுகள்
- கடந்த 2024-ம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட சிறப்பு புத்தாண்டு கூட்டத்தில், அன்புமணி மைக்கை தூக்கிப் போட்டு பேசியது, பனையூரில் புதிய கட்சி அலுவலகம் தொடங்கியுள்ளேன். அங்கே என்னை வந்து பாருங்கள் என கட்சியை பிளவுப்படுத்தியது, குழப்பத்தை ஏற்படுத்தியது.
- கடந்த மே மாதம் நடந்த மாநாட்டிற்கு பின், தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்று ராமதாஸ் அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும், உங்களிடம் கையெழுத்து பெற்று என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுவார் என்று வதந்திகளைப் பரப்பி 108 மாவட்ட செயலாளர்களில், 100 மாவட்ட செயலாளர்களைத் தைலாபுரம் வரவிடாமல் தடுத்தார்.
- பாமக சமூக ஊடகப் பிரிவினர் சிலரை கையில் வைத்துக்கொண்டு, ராமதாஸ் மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் தவறான செய்திகளைப் பரப்பி அவமானத்தை ஏற்படுத்தினார்.
- தமிழ்நாட்டின் மூத்தவர்கள், இருவருக்கும் மத்தியில் சமாதன பேச்சுவார்த்தையை நடத்தினர். இதை ராமதாஸ் ஏற்ற போதும் அன்புமணி தரப்பு உதாசினப்படுத்தியது
- தைலாபுரத்தில் ராமதாஸ் இருக்கைக்கு அருகேயே ஒட்டுக்கேட்பு கருவியைப் பொருத்தியது.
- ராமதாஸ் அனுமதி இல்லாமல், பொதுக்குழு கூட்டம் கூட்டி, அதில் ஒரு நாற்காலிக்கு துண்டு அணிவித்து, அவரது புகைப்படம் வைத்து, ராமதாஸிற்கு நல்ல புத்தி தரும்படி வேண்டி அவமதித்தார்.
- ராமதாஸிடம் தகவல் தெரிவிக்காமல், உரிமை காக்கும் பயணம் மேற்கொண்டார்.
- தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸை சந்திக்க வருபவர்களிடம் தடுத்து, கடத்திச் செல்கிறார்.
- ராமதாஸ் பெயர் மற்றும் புகைப்படம் பயன்படுத்தப்படக் கூடாது என்று வெளிப்படையாக வலியுறுத்தியும், ‘எங்களது குலசாமி’ என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
- மக்கள் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ராமதாஸ் சம்பந்தமான எந்த நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பவில்லை. இப்படி பாமக நிறுவனர் ராமதாஸ் உருவாக்கிய தொலைக்காட்சியை அபகரித்துக் கொண்டனர்.
- மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பசுமை தாயக அமைப்பைக் கைப்பற்றினார்.
- ராமதாஸ் அனுமதி இல்லாமல், அன்புமணி ஒரு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, ராமதாஸிற்கு நாற்காலி ஒன்று போட்டு அவமதித்தார்.
- பாமக தலைமை அலுவலகத்தை மாற்றம் செய்தார்.
- கடந்த மே மாதத்திற்கு பிறகு, ராமதாஸின் அனைத்து நியமனங்களும் செல்லும். அதற்கு முன், ராமதாஸ் நீக்கி, அன்புமணி, ‘அவர்கள் கட்சியில் தொடர்வார்கள்’ என்று அறிவித்தது செல்லாது.
- ராமதாஸிடம் 40 முறை பேசியதாக வெளியில் பொய் கூறி வருகிறார்.
- ஜி.கே மணி, ஆர்.அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று கேலி செய்தார் என அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு 16 குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கையை ஒழுங்கு நடவடிக்கை குழு பாமக தலைவர் ராமதாஸிடம் வழங்கியது.
